
தசரா திருவிழாவில் பங்கேற்பதற்காக நாகரஹொளே காட்டில் இருந்து மைசூருக்கு வருகைதந்த யானைப் படைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா 409-ஆம் ஆண்டாக அக்.10 முதல் 19-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
தசரா விழாவின் இறுதிநாளான அக்.19-ஆம் தேதி மனதை மயக்கும் யானை ஊர்வலம் இடம்பெறுகிறது. யானை அர்ஜுனா , 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை சுமந்துகொண்டு ஊர்வலத்தை வழிநடத்திச் செல்லும். இதை பின்தொடர்ந்து, பல யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்கும். இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண உலகத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் குவிந்திருப்பார்கள். இந்த தசரா திருவிழாவில் பங்கேற்கும் யானைகள் அர்ஜுனா(58 வயது), வரலட்சுமி(62 வயது), விக்ரமா(45 வயது), தனஞ்செயா(35 வயது), கோபி(36 வயது) ஆகிய 5 யானைகள் செப்.2-ஆம் தேதி மைசூரு மாவட்டம், ஹுனசூர் வட்டம், நாகரஹொளே புலிகள் சரணாலயத்தில் உள்ள வீரனஹொசஹள்ளி வனப் பகுதியில் இருந்து மைசூரை நோக்கி பயணம் புறப்பட்டன. இந்த 5 யானைகளும் அன்று மாலை மைசூரில் உள்ள வனத் துறை அலுவலக வளாகத்திற்கு அழைத்துவரப்பட்டன. அங்கு வழக்கமான உற்சாகத்தோடு யானைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதேபோல, மைசூரில் உள்ள அரண்மனைக்கு முறைப்படி யானைகளை அழைத்துவருவது சம்பிரதாயம். அதன்படி, யானைப்படையை புதன்கிழமை அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டன. அழகிய, வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைப் படைக்கு உயர்கல்வித் துறைஅமைச்சர் ஜி.டி.தேவெகெளடா தலைமையில் பூரணகும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. யானைப்படைக்கு அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா, பாரம்பரிய முறையில் சிறப்புபூஜை செய்து கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்டதின்பண்டங்களைக் கொடுத்தார். இவ் விழாவில் சுற்றுலாத் துறைஅமைச்சர் எஸ்.ஆர்.மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் ஏ.எச்.விஸ்வநாத், தன்வீர்சேட், அஸ்வின்குமார் மகாதேவ், பி.ஹர்ஷாவர்த்தன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நயிமாசுல்தானா, தென்சரக காவல் ஆணையர் கே.வி.சரத்சந்திரா, மாவட்ட ஆட்சியர் அபிராம் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் யானைகள் அரண்மனை வளாகத்தில் தங்கவைக்கப்பட்டன. ஒருமாத காலம் அங்கு தங்கியிருக்கும் யானைகளுக்கு அதன் பாகன்கள் பயிற்சி அளித்து பராமரிப்பார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





