கோலார் தங்கவயலில் மீண்டும் வசந்தம் வீசுமா?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து நூறாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம், கடந்த 2001-ஆம் ஆண்டு மூடப்பட்ட பிறகு, அதில் பணியாற்றி வந்த தொழிலாளர்களை மத்திய
கோலார் தங்கவயலில் மீண்டும் வசந்தம் வீசுமா?
Updated on
2 min read

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து நூறாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம், கடந்த 2001-ஆம் ஆண்டு மூடப்பட்ட பிறகு, அதில் பணியாற்றி வந்த தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டுள்ளன.
மாற்று வேலைவாய்ப்பு, இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 18 ஆண்டுகளாகப் போராடி வந்த தொழிலாளர்கள் நலன்களை மறந்துவிடும் நிலை உருவாகியுள்ளது.
தங்கச் சுரங்கம் தொடக்கம்: ஆங்கிலேயர்களின் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு, 1880-ஆம் ஆண்டு கோலார் தங்கவயலில் ஜான்டெய்லர் என்ற ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட நிறுவனம், தங்கச் சுரங்கத் தொழிலைத் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் ஆபத்தான சுரங்கப் பணிக்கு யாரும் முன் வராத நிலையில், அப் பணியில் ஈடுபடுத்திக்கொள்ள தற்போதைய தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட தமிழர்கள் முன்வந்தனர்.
தங்கப் படிவங்கள் முழுமையாக எடுக்கப்பட்டு, சுரங்கத் தொழிலை நிறுத்தி விட முடிவு செய்த நிலையில், ஜான்டெய்லர் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு தங்கப் படிவங்களை தேடிக் கொண்டிருந்தார். அப்போது, மாரிக்குப்பம் பகுதியில் அமைந்திருந்த டெய்லர் சாஃப்ட் சுரங்கத்தில் 173-ஆவது அடியில் மேற்கே பக்கவாட்டில் சுரங்கம் தோண்டியதில் மிக அதிகளவில் தங்கப்படிமப் பாறைகள் கிடைத்தன. " சாம்பியன் லோடு' என்று அழைக்கப்பட்ட இந்த தொடர் தங்கப்படிமம் கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால், அன்றைக்கே தங்கச் சுரங்கம் மூடப்பட்டு, சுரங்கத் தொழில் முடங்கியிருக்கும். 
தங்கச் சுரங்கம் மூடல்: 1880-ஆம் ஆண்டு தோண்டப்பட்ட தங்கச் சுரங்கம், 121 ஆண்டுகள் கழித்து 2001-ஆம் ஆண்டு தங்கப் படிமங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி மூடப்பட்டது. அப்போது தங்கச் சுரங்கத்தில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு, நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. தொழிலாளர்கள், அவர்கள் பங்கெடுத்த தொழிற்சங்கங்களின் அறவழி மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாக தங்கச் சுரங்கத்தை மீண்டும் புதுப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
ஒப்பந்தப் புள்ளி கோரல்: இதை தொடர்ந்து, 2006-ஆம் ஆண்டு தங்கச் சுரங்கத்தை திறக்க உலகளவிலான ஒப்பந்தப்புள்ளியை கோர மத்திய அமைச்சரவை தீர்மானித்தது. இதனிடையே, சுரங்கத்தை மறுசீரமைத்து மத்திய அரசே நடத்த வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, மத்திய அரசு, உலகளவிலான ஒப்பந்தப் புள்ளியில் வெற்றிபெறும் தனியார் நிறுவனமே தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தன்னார்வ பணி ஓய்வுத்திட்டத்தின் பயனுறுத் தொகையான ரூ.52 கோடியை வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதனால் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை, மாற்று வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் கிடைக்கும் என்று தொழிலாளர்கள் கருதியிருந்தனர்.
கிடப்பில் போடப்பட்ட திட்டம்: ஆனால், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரி சுரங்கத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. கோலார் தங்கவயலுக்கு மீண்டும் வசந்தம் வரும் என்று காத்திருந்த மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். கோலார் தங்கவயலின் வாழ்வாதாரமாக விளங்கிய தங்கச்சுரங்கப் பிரச்னை, ஒவ்வொரு தேர்தல் களத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டதைக் கண்டு சுரங்கத் தொழிலாளர்கள் வெதும்பி, எஞ்சியுள்ள காலத்தை கடத்தத் துணிந்துவிட்டனர். பெரும்பாலானோர் பெங்களூரில் கூலித் தொழிலுக்குச் சென்று விட்டனர்.
உலகளவில் மிகவும் ஆபத்தான சுரங்கத் தொழிலில் வியர்வை சிந்தி உழைத்த தொழிலாளர்களின் ஊதியத்தைக்கூட கடனாக வைத்த மத்திய அரசு கனத்த மெளனம் சாதிக்கிறது, காலத்தின் கொடுமையாகும். தட்டிக்கேட்க யாருமின்றி தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நிராயுத பாணிகளாக நிற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com