கடந்த 5 நாட்களாக நடைபெற்ற பன்னாட்டு இந்திய விமானத்தொழில் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. 2021-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் அடுத்த கண்காட்சி எங்கு நடக்கும் என்பது குழப்பமாக உள்ளது.
இந்தியாவின் விமானம் மற்றும் ராணுவதளவாடங்கள் உற்பத்தித் தொழிலை உலக அளவில் உயர்த்தும் நோக்கில் மத்திய ராணுவத் துறையால் 1996-ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கிவைக்கப்பட்ட பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி, 12-ஆவது முறையாக பிப்.20-ஆம் தேதி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது. இதற்கான விழாவில் ஆளுநர் வஜுபாய்வாலா கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.
மக்கள்கூட்டம்
இந்த கண்காட்சியில் தினந்தோறும் வெவ்வேறு நாடுகளின் 61 வகையான விமானங்களின் தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்தும் வான்வழி சாகசங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 238 இந்திய நிறுவனங்கள், 165 வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் 403 அரங்குகள் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் முப்படைக்கும் தேவையான விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், ரேடார்கள், தொலை உணர்வு தொழில்நுட்பங்கள், கண்காணிப்பு முறை கருவிகள், விமான மின்னணுவியல், போரியல், உந்துவிசை கருவிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. மேலும், விமான தொழிலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், விமானவியல் தொழில்நுட்பங்கள் சார்ந்த அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியின்போது கிட்டதட்ட 4 லட்சம் பேர் வருகைதந்து, வான்வழி விமான சாகசங்களை கண்டு களித்தனர்.
விமான சாகசங்கள்
கடந்த 5 நாள்களாக எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் இந்திய விமானப் படையின் வெவ்வேறு வகையான இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், சிறுவிமானங்கள், இலகுரக போர்விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய விமானப்படையின் பெருமைமிகு அங்கமாக விளங்கும் தேஜஸ் இலகுரக போர் விமானம், சாரங்க் ஹெலிகாப்டர், தனுஷ், ருத்ரா, துருவ் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், சுகோய்-30-எம்.கே.ஐ. இலகுரக போர் விமானம், டக்கோடா விமானம், ஜக்குவார் விமானம், ஹாக் ஹெலிகாப்டர், எம்.ஐ.-17 ஹெலிகாப்டர், எச்டிடி-40 பயிற்சி விமானம், இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்(எல்யூஎச்), சாரஸ் போர் விமானம், ஏர்பஸ்-ஏ-330 பயணிகள் விமானம், போயிங்-பி-52, அமெரிக்காவின் பி8ஐ விமானம், எஃப்-16 இலகுரக போர்விமானம்,பிரான்சின் ரஃபேல் இலகுரக போர்விமானங்களின் மெய்சிலிர்க்கும் சாகசங்களும் இடம்பெற்றன.
விபத்து
விமானத் தொழில் கண்காட்சி தொடங்குவதற்கு முந்தைய நாளில் ஹாக் விமானத்தில் சூரியகிரண்குழுவினர் விமான சாகச ஒத்திகையில் ஈடுபட்டபோது இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் விமானி சாஹில் காந்தி உயிரிழந்தார், இருவிமானிகள் காயமடைந்தனர். இதனால் தொடக்கநாள் உள்பட 3 நாள்கள் சாகசத்தில் ஈடுபடாமல் இருந்த சூரியகிரண்குழுவினர் சனி,ஞாயிற்றுக்கிழமை வான்சாகசத்தில் ஈடுபட்டு மக்களை மகிழ்வித்தனர். வாகன நிறுத்தத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 300 கார்கள் எரிந்து சேதமடைந்தன.
சாதனை மகுடம்
இந்தியாவின் சொந்த தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள தேஜஸ் இலகுரக போர் விமானத்தில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பறந்து சாதனை படைத்தார். தேஜஸ் விமானத்தில் பறந்த முதல்பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.
அடுத்த கண்காட்சி
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்திய விமானத்தொழில் கண்காட்சி, பெங்களூரில் 12முறை நடந்துள்ளன. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், தனது சொந்த மாநிலமான கோவாவில் விமானத்தொழில் கண்காட்சியை நடத்த முயற்சி மேற்கொண்டிருந்தார். தற்போது நடந்துமுடிந்த கண்காட்சியை பெங்களூருக்கு பதிலாக உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னெளவில் நடத்த தற்போதைய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சி மேற்கொண்டார். ஆனால் கர்நாடக அரசு மற்றும் விமானத் தொழில் நிறுவனங்களின் எதிர்ப்பால் அந்த முடிவு கைவிடப்பட்டு, நிகழாண்டில் கண்காட்சி பெங்களூரில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் 2021-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் கண்காட்சியை எங்கு நடத்துவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. அதனால் தான் அடுத்த கண்காட்சி நடக்கும் இடத்தை அறிவிக்காமல் கண்காட்சி நிறைவடைந்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கட்டளை அதிகாரி பி.கே.பட்டாச்சார்யா கூறுகையில்," அனேகமாக, 2020-இல் நடக்கவிருக்கும் ராணுவக் கண்காட்சியின்போது இடம் அறிவிக்கப்படலாம்." என்றார் அவர்.
பெங்களூருக்கு பதிலாக ஹைதராபாத், புணே, சென்னை ஆகிய இடங்களில் ஏதாவதொரு நகரில் 13-ஆவது விமானத் தொழில் கண்காட்சியை நடத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாகவும், அதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில், கண்காட்சி நிகழ்விடத்தை பெங்களூரில் இருந்து மாற்றும் முயற்சியை கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்க திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை

ஆனந்தம்! 25 ஆண்டுக் கொண்டாட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


