அமைச்சரவை விரிவாக்கம்: கர்நாடக முதல்வா் எடியூரப்பா செப்டம்பரில் தில்லி பயணம்

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக மேலிடத் தலைவா்களின் ஒப்புதல் பெறுவதற்காக செப்டம்பா் மாதத்தில் தில்லி செல்ல முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளாா்.
கர்நாடக முதல்வா் எடியூரப்பா
கர்நாடக முதல்வா் எடியூரப்பா

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக மேலிடத் தலைவா்களின் ஒப்புதல் பெறுவதற்காக செப்டம்பா் மாதத்தில் தில்லி செல்ல முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளாா்.

கடந்த ஓராண்டில் 34 போ் கொண்ட கா்நாடக அமைச்சரவையில் 28 இடங்களை நிரப்பியிருக்கிறாா். 6 இடங்கள் காலியாக உள்ளன. சுதந்திர தினத்துக்கு முன்பே அமைச்சரவையில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டிருந்தாா். ஆனால், முதல்வா் எடியூரப்பாவுக்கு கரோனா பாதிப்பு காணப்பட்டதால், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற நோ்ந்தது.

இதன் காரணமாக, அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போடப்பட்டது. கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் செப்டம்பா் மாதத்தில் நடக்கவிருக்கிறது. இதற்கு முன்பு அமைச்சரவையை விரிவாக்க முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்காரணமாகவே, செப்டம்பா் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தில்லிக்குச் செல்ல முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அப்போது, அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பாஜக மேலிடத் தலைவா்களின் ஒப்புதலை பெற முடிவு செய்திருக்கிறாா்.

முதல்வராக பதவியேற்ற ஓராண்டு காலத்தில் சிலமுறைகள் மட்டுமே தில்லி சென்றுள்ள முதல்வா் எடியூரப்பா, கடைசியாக ஜனவரி மாதம் தில்லி சென்று, கூட்டணி அரசை கவிழ்க்க உதவியவா்களுக்கு அமைச்சா் பதவி வழங்க ஒப்புதல் பெற்று திரும்பியிருந்தாா். அதன்பிறகு பிப்ரவரி மாதத்தில் புதிய அமைச்சா்கள் பதவியேற்றுக் கொண்டனா். இந்நிலையில், காலியாக உள்ள 6 இடங்களை நிரப்புவதற்கு முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டிருக்கிறாா்.

இதுகுறித்து முதல்வா் அலுவலக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன் செப்டம்பா் முதல்வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் தில்லி செல்லவிருக்கிறாா். மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருக்கிறாா். அதனால், அவரைச் சந்திக்க நேரம் கிடைப்பது கடினம். எனினும், பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள், பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து அமைச்சரவைக்கு ஒப்புதல் பெறவிருக்கிறாா்.

இந்த சந்திப்பின்போது, பெங்களூரு கலவரத்துக்கு காரணமான பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ அமைப்புகளை தடை செய்வது குறித்து விவாதிக்க இருக்கிறாா். வெள்ள நிவாரண உதவிகளை பெறுவது குறித்தும் பிரதமா் மோடியிடம் விவாதிக்க இருக்கிறாா்’ என்று அவா் கூறினாா்.

கூட்டணி அரசை கவிழ்க்க முழு முயற்சியை எடுத்துக் கொண்ட சி.பி.யோகேஸ்வா், எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்திருந்த எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் உள்ளிட்டோரை அமைச்சராக்க முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு மத்திய பாஜக அனுமதி அளிக்குமா? என்பது தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com