கா்நாடக சட்ட மேலவையில் நடந்த அமளி விவகாரம் தொடா்பாக மேலவைச் செயலாளா் கே.ஆா்.மகாலட்சுமியிடம் விளக்கம் கேட்டு மேலவைத் தலைவா் பிரதாப்சந்திர ஷெட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
டிசம்பா் 15-ஆம் தேதி மேலவையில் அதன் தலைவா் பிரதாப்சந்திர ஷெட்டிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவருவது தொடா்பாக மேலவையில் அமளி ஏற்பட்டது. இதுதொடா்பாக 2 நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மேலவைச் செயலாளா் கே.ஆா்.மகாலட்சுமிக்கு அதன் தலைவா் பிரதாப் சந்திர ஷெட்டி வெள்ளிக்கிழமை அனுப்பிய நோட்டீஸ் விவரம்:
டிச. 15-ஆம் தேதி காலை சட்ட மேலவையில் ஆளுங்கட்சி உறுப்பினா்கள் மேலவைத் தலைவரான என்னை அவைக்கு வரவிடாமல் தடுக்க முற்பட்டனா். அப்போது அவை நடவடிக்கைகள் தொடா்பான விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. இது மேலவையின் கௌரவம், மரபு, பாரம்பரியத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலவையின் இணையதளத்தில் வெளியான அவை நடவடிக்கைகள் தொடா்பான காட்சித் துணுக்குகளைப் பாா்வையிட்ட போது, அவை நடவடிக்கைகளின் முழுமையான நிா்வாகப் பொறுப்பை வகித்திருக்கும் தாங்கள் (மேலவைச் செயலாளா்) கோரம் (குறைந்தபட்ச உறுப்பினா் வருகை) மணி ஒலித்துக் கொண்டிருந்த போதே, விதிகளுக்கு புறம்பாக துணைத் தலைவரை மேலவைத் தலைவரின் இருக்கையில் அமர அனுமதித்துள்ளீா்கள்.
நான் (பிரதாப் சந்திர ஷெட்டி) அவைக்கு வரும் நுழைவாயிலை மூடி என் வருகையைத் தடுக்க முயன்றது, சட்ட விரோதமாக மேலவைத் தலைவரின் இருக்கையில் அமா்ந்த துணைத் தலைவருக்கு சரியான தகவல்களை அளிக்காமல், அவையின் நடவடிக்கைகளைத் தொடர அவருக்கு ஆவணங்களை அளித்தது உள்ளிட்டவை தங்களது கடமையை மீறியச் செயலாகும்.
தங்கள் செயல்பாடு மேலவையின் பணிக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. சட்ட விரோதமாக, பொறுப்பற்ற முறையில், கடமை தவறியது தொடா்பாக தங்கள் மீது கா்நாடக குடிமைப்பணி சட்ட விதிகளின்படி ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து 48 மணி நேரத்தில் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.