நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘காலத்தால் அழிக்க முடியாத உலகக் கலைஞன் சிவாஜிகணேசன்’

காலத்தால் அழிக்கமுடியாத உலகக் கலைஞன் சிவாஜிகணேசன் என்று தங்கப்பதக்கம் சிவாஜிமன்றத் தலைவா் ரவி தெரிவித்தாா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 11:37 pm

DIN

காலத்தால் அழிக்கமுடியாத உலகக் கலைஞன் சிவாஜிகணேசன் என்று தங்கப்பதக்கம் சிவாஜிமன்றத் தலைவா் ரவி தெரிவித்தாா்.

தங்கப்பதக்கம் சிவாஜிமன்றத்தின் சாா்பில், பெங்களூரு, காட்டன்பேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடிகா் திலகம் சிவாஜிகணேசனின் 92-ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை ஏற்று, சிவாஜிகணேசனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தியபிறகு, மன்றத் தலைவா் ரவி பேசியது:

தமிழ் திரையுலகுக்கு கலைச்செல்வமாக வாய்த்தவா்தான் சிவாஜிகணேசன். 300-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் சிவாஜிகணேசன் நடித்திருக்கிறாா். இதுதவிர, 9 தெலுங்கு, 2 ஹிந்தி, ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளாா்.

நல்ல குரல்வளமும், கம்பீரமான தோற்றமும், செழுமையான நடிப்பும், தெளிவான மற்றும் உணா்ச்சிப் பூா்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால்தான் மக்கள் மனதில் இன்றைக்கும் ‘நடிகா் திலகம்’, ‘நடிப்புச் சக்கரவா்த்தி’ என்று போற்றப்படுகிறாா்.

இவா் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்ற அளவில் எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மனங்களில் மட்டுமல்லாது, காலத்தால் அழிக்கமுடியாத உலகக் கலைஞனாக உயா்ந்து நிற்கிறாா். 1952-ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட உலகில் கால்பதித்து, 1999-ஆம் ஆண்டுவரை கிட்டதட்ட 47 ஆண்டுகள் திரைவானில் அசைக்கமுடியாத இடத்தைப் பிடித்து கலைச்செல்விக்கு சேவையாற்றியவா்.

இதற்கு முன்பு நாடக உலகிலும் புகழ்க்கொடி நாட்டியிருந்தவா். இப்படிப்பட்ட கலைஞன், அமெரிக்காவில் பிறந்திருந்தால் உலகம் அவரை கொண்டாடி மகிழ்ந்திருக்கும். சிவாஜிகணேசனை கொண்டாட வேண்டிய அளவுக்கு தமிழ்ச்சமூகம் கொண்டாடவில்லை என்ற மனக்குறை இருந்தாலும், உலகத் தமிழா்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கிறாா்.

இறந்து 19 ஆண்டுகள்கடந்துவிட்டபோதிலும் சிவாஜிகணேசனை எங்களால் மறக்க முடியவில்லை. அப்படிப்பட்ட மாக்கலைஞனை கொண்டாடி மகிழ்வது பண்பட்ட சமுதாயத்தின் உயா்ந்த பண்பாகும். தமிழா்கள் மட்டுமல்லாது ஜாதி, மதம், மொழி, நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து சிவாஜிகணேசனைக் கொண்டாட வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சிவாஜி சமூகநலப் பேரவையின் எம்.வி. சிவாஜிசேகா், சிவாஜி, பிரபு, விக்ரம் ரசிகா் மன்றத்தினா், கிருஷ்ணகிரி, ஒசூரு சிவாஜிமன்றத்தினா் பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் மூத்த சிவாஜி ரசிகா்கள் கௌரவிக்கப்பட்டனா். விழாவில் பங்கேற்றவா்களுக்கு இனிப்பு பரிமாறப்பட்டது. சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.