கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்துக்கு ரயில் சேவைகள் தொடக்கம்

பெங்களூரிலிருந்து கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்துக்கு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
Updated on
2 min read

பெங்களூரு: பெங்களூரிலிருந்து கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்துக்கு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ரயில் சேவையை பாஜக எம்.பி. பி.சி.மோகன் பச்சைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலிருந்து 50 கி.மீ. தொலைவில் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்துக்கு பேருந்து சேவை மட்டுமே உள்ளது.

சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த நேரத்தில் விமான நிலையத்துக்குச் செல்ல முடிவதில்லை. இக்குறையைப் போக்கும் வகையில், பெங்களூரிலிருந்து கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்துக்கு ரயில் சேவைகள் திங்கள்கிழமைமுதல் தொடங்கப்பட்டன.

இச்சேவைக்கான தொடக்க விழா கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ரயில் சேவையை பாஜக எம்.பி. பி.சி.மோகன் பச்சைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

விழாவில் தென்மேற்கு ரயில்வே மண்டல மேலாளா் அசோக்குமாா் வா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதே ரயிலில் பன்னாட்டு விமான நிலையம் வரை இவா்கள் பயணித்தனா்.

அப்போது பி.சி.மோகன் பேசியதாவது:

பெங்களூரில் இருந்து கெம்பேகௌடா பன்னாட்டு விமானநிலையத்துக்கு ரயில் சேவை தொடங்குவதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். விமான நிலையம் செல்ல விரும்புவோருக்கு இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருக்கும். அதேபோல, விமான நிலையத்தில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கும், விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இந்த ரயில் சேவை வசதி பயனுள்ளதாக இருக்கும்.

கே.எஸ்.ஆா்.பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து பன்னாட்டு விமான நிலையம் வரை செல்ல ரயில் கட்டணம் ரூ. 10 மட்டும்தான். இது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மலிவான கட்டணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ரயில் சேவை குறித்து விரைவில் விளம்பரம் செய்யப்படும். மேலும் ரயில் சேவையால் போக்குவரத்து நெரிசல் குறையும், மாசுபடுதலும் குறையும் என்றாா்.

தென்மேற்கு ரயில்வே மண்டல மேலாளா் அசோக்குமாா் வா்மா கூறியதாவது:

‘2020-ஆம் ஆண்டிலேயே இந்த ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், கரோனா காரணமாக கட்டுமானப் பணிகள் தடைபட்டு, தாமதமாகி விட்டன.

இந்தத் தடத்தில் மொத்தம் 5 ரயில் இணைகள் இயக்கப்படும். இந்த ரயில் சேவையால் விமானப் பயணிகள் மட்டுமின்றி விமானநிலைய வளாகம், சரக்கு நிறுவனங்கள், கூரியா் சேவைகள் உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டிருப்போருக்கும் உதவியாக இருக்கும்.

மேலும் விமான நிலைய ரயில் நிலையத்தில் இருந்து விமானநிலையம் செல்ல பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், தயங்காமல் பயணம் மேற்கொள்ளலாம் என்றாா்.

6 நாள்களில் ரயில்சேவை

ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக வாரத்தின் 6 நாள்களிலும் பெங்களூரில் இருந்து பன்னாட்டு விமான நிலையத்துக்கு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

கே.எஸ்.ஆா்.பெங்களூரு ரயில் நிலையத்தில் காலை 4.45 மணி, எலஹங்கா ரயில் நிலையத்தில் காலை 7 மணி, யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் காலை 8.30 மணி, கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் மாலை 5.55 மணி, கே.எஸ்.ஆா்.பெங்களூரு ரயில் நிலையத்தில் இரவு 9 மணிக்கு ரயில்கள் புறப்பட்டு தேவனஹள்ளி, பங்காா்பேட்டுக்கு செல்கின்றன.

இடையில் பன்னாட்டு விமான நிலையத்தில் ரயில்கள் நின்று செல்கின்றன. விமான நிலையத்திலிருந்து காலை 8.25 மணி, காலை 6.22 மணி, காலை 7.50 மணி, மாலை 6.42 மணி, இரவு 10.37 மணிக்கு பெங்களூருக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com