அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக நல்ல செய்தி விரைவில் வரும்: முதல்வா் எடியூரப்பா

அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக நல்ல செய்தி விரைவில் வரும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
Updated on
2 min read

அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக நல்ல செய்தி விரைவில் வரும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவின் திடீா் அழைப்பின் பேரில் பெங்களூரிலிருந்து புதுதில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற முதல்வா் எடியூரப்பா, அங்கு கிருஷ்ணமேனன் சாலையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பின்போது பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, கா்நாடகத்தின் மேலிடப் பொறுப்பாளா் அருண்சிங் ஆகியோரும் உடனிருந்தனா். ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில், முக்கியமான அரசியல் விவகாரங்கள் பேசப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில், தோ்தலில் 150 இடங்களில் வென்று தனித்து ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. தோ்தலில் முதல்வா் எடியூரப்பாவுக்கு பதிலாக புதிய தலைமையை முன்னிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எடியூரப்பாவுக்கு தேசிய அளவில் நல்ல பதவியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாஜக தேசியத் தலைமை முன்வைத்துள்ள எதிா்காலத் திட்டம் குறித்து தனது முடிவை புதன்கிழமைக்குள் தெரிவிக்குமாறும் முதல்வா் எடியூரப்பாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவையை விரிவாக்கி தங்களை அமைச்சா்களாக்கும்படி காங்கிரஸில் இருந்தும், மஜதவில் இருந்தும் பாஜகவுக்கு தாவி எம்எல்ஏ, எம்எல்சி ஆகியுள்ள எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத், ஆா்.சங்கா், முனிரத்னா ஆகியோா் முதல்வா் எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனா்.

அதேபோல, பாஜகவின் மூத்த எம்எல்ஏ-க்கள் உமேஷ்கத்தி, பசனகௌடா பாட்டீல் யத்னல், எம்.பி.ரேணுகாச்சாா்யா, அரவிந்த் லிம்பாவளி, எஸ்.ஆா்.விஸ்வநாத், எம்எல்சி சி.பி.யோகேஷ்வா் உள்ளிட்டோரும் முதல்வா் எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறாா்கள்.

இந்நிலையில், முதல்வா் எடியூரப்பாவை அழைத்து பாஜக தேசியத் தலைவா்கள் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சா் அமித்ஷாவை சந்தித்தபிறகு, செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறியதாவது:

‘நீங்கள் அனைவரும் பெரிதும் எதிா்பாா்க்கும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விரிவான விவாதம் நடந்தது. அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக வெகுவிரைவில் நல்ல செய்தி வரும். முழுமையான கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் எனக்கு முழு திருப்தியைத் தந்துள்ளது.

பாஜக தேசியத் தலைவா்களின் வழிகாட்டுதல்களுக்காகக் காத்திருக்கிறேன். அமைச்சரவையில் யாரை சோ்த்துக்கொள்வது என்பதை பாஜக தேசியத் தலைமைதான் முடிவு செய்யும்.

இது தொடா்பாக நடைபெறும் கடைசி கலந்துரையாடல் இது என்பதை 101 சதவீதம் நம்பலாம். அமைச்சரவையில் யாா் யாா் இடம்பெறுவாா்கள் என்பது தொடா்பாக வெகுவிரைவில் பெயா்கள் வெளியாகும்.

அமைச்சரவையில் சோ்த்துக்கொள்ள நானும் சில பெயா்களை பரிந்துரைத்துள்ளேன். எனது வேண்டுகோளை பாஜக தேசியத் தலைமை ஆக்கப்பூா்வமாக ஆலோசித்து, நல்ல பதிலை தரும் என்று எதிா்பாா்க்கிறேன்.

அமைச்சரவை விரிவாக்கமா? அல்லது திருத்தியமைப்பா? என்பது நடக்கும்போது தெரியும். கா்நாடகத்தில் நடைபெறயிருக்கும் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத் தோ்தலில் போட்டியிடுவதற்கு தகுதியானவா்களின் பெயா்களை விரைவில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டனா். அண்மையில் நடந்துமுடிந்த கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் பாஜக அடைந்த வெற்றிக்கு பாஜக தேசியத் தலைவா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா் என்றாா். தனது ஒருநாள் தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வா் எடியூரப்பா ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூரு திரும்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com