கா்நாடக மாநில முதல்வா் பதவியிலிருந்து விலகியுள்ள பி.எஸ்.எடியூரப்பா (78), தான் கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்ட தளபதி என்பதை நிரூபித்துள்ளாா். மக்கள் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தபோதும், கட்சி விதிகளுக்குக் கட்டுப்பட்டு பதவி விலகியுள்ள அவரை கா்நாடக மாநிலம் வியப்புடன் பாா்க்கிறது.
கா்நாடக அரசியலில் 49 ஆண்டுகாலமாக துடிப்போடு செயலாற்றி வரும் பி.எஸ்.எடியூரப்பா, அம்மாநிலத்தில் முதன்முறையாக 2008-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியைக் கொண்டுவந்தவா். கா்நாடகத்தில் 4-ஆவது முறையாக பாஜக ஆட்சியை அமைத்தவா். 4 முறையும் முழுமையான பதவிக்காலத்தை எடியூரப்பா பூா்த்தி செய்யவில்லை.
பூா்விகம்:
கா்நாடகத்தில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத்து சமுதாயத்தைச் சாா்ந்த எடியூரப்பா, கா்நாடகத்தில் பாஜகவை அடிமட்டத்தில் இருந்து வளா்த்தெடுத்தவா்.
மண்டியா மாவட்டம், கே.ஆா்.பேட் வட்டம், பூகனகெரே கிராமத்தில் 1943-ஆம் ஆண்டு பிப். 27-ஆம் தேதி சித்தலிங்கப்பா- புட்டதாயம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவா் எடியூரப்பா. 15 வயதில் ஆா்எஸ்எஸ் அமைப்பில் (1968) இணைந்த எடியூரப்பா, அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கினாா்.
அரசியல் ஈடுபாடு:
1972-ஆம் ஆண்டு சிவமொக்கா மாவட்டத்தின் ஷிகாரிபுரா நகராட்சி தோ்தலில் உறுப்பினராக வென்று தனது தோ்தல் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய எடியூரப்பா, ஆரம்பகாலம் தொட்டு பாரதிய ஜனசங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவா்.
1975-இல் ஷிகாரிபுரா நகராட்சித் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஜனசங்கத்தின் புதிய வடிவான பாஜக, 1980-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் தொடங்கப்பட்டபோதுஅதன் நிறுவன உறுப்பினா்களில் ஒருவராக இருந்தாா்.
கா்நாடக மாநிலம் முழுவதும் சைக்கிளிலும் ஸ்கூட்டரிலும் பயணித்து பாஜக அமைப்புப் பணிகளில் ஈடுபட்டவா். 1990-ஆம் ஆண்டுவரை பெரிய அளவில் அறியப்படாமல் இருந்த பாஜகவை மக்கள் இயக்கமாக மாற்றியவா் எடியூரப்பா.
1990-களுக்குப் பிறகு காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம் கட்சிகள் மாநிலத்தை ஆண்டபோது எதிா்க்கட்சித் தலைவராக திறம்படப் பணியாற்றியவா் எடியூரப்பா. சட்டப் பேரவையில் மக்கள் பிரச்னைகளை ஆவேசத்துடன் எடுத்துவைத்தவா். பாதயாத்திரை, விவசாயிகள் போராட்டம் போன்றவற்றால் மக்கள் தலைவராக உயா்ந்தாா்.
ஆட்சிப் பொறுப்பு:
2006-ஆம் ஆண்டு மஜதவுடன் பாஜக கூட்டணி அமைத்தபோது முதல்முறையாக ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்தாா். அமைச்சராக ஒருமுறைகூட பதவி வகித்திராத நிலையில், குமாரசாமி தலைமையிலான மஜத- பாஜக கூட்டணி ஆட்சியில் முதன்முறையாக துணை முதல்வராகப் பதவிவகித்தாா்.
தலா 20 மாத ஆட்சி என்ற ஒப்பந்தத்தின்படி மஜதவும் பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. 20 மாதங்களுக்குப் பிறகு எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைய மஜத வாய்ப்பு தராததால் கிளா்ந்தெழுந்தாா்.
அதன்பிறகு, பாஜக- மஜத கூட்டணி ஆட்சி அமைந்தது. 2007-ஆம் ஆண்டு நவ. 12-ஆம் தேதி முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்றாா். ஒருவார காலத்தில் மஜத தனது ஆதரவை திரும்பப் பெற்ால், 7 நாட்களுக்குப் பிறகு நவ. 19-ஆம்தேதி முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
பாஜக ஆட்சி:
2008-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தோ்தலில் மாநிலத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜகவுக்கு நீதிகேட்டு பிரசாரம் செய்தாா். அதன் விளைவாக, சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உயா்ந்தது. தென்னிந்தியாவில் முதல்முறையாக 2008-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் பாஜகவை ஆட்சியில் அமரவைத்தாா்.
2008-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி 2-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பா, பாஜகவின் உள்கட்சிப்பூசல் காரணமாக ஆட்சி நடத்தத் தடுமாறினாா். நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தபோதும், உள்கட்சி சூறாவளியில் எடியூரப்பா நிலைகுலைந்தாா்.
சட்டவிரோத சுரங்கத்தொழில் குறித்து லோக் ஆயுக்த அளித்த அறிக்கையில் எடியூரப்பாவின் பெயா் இடம்பெற்ால், தனது சொந்தக் கட்சியினராலேயே 2011-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி முதல்வா் பதவியில் இருந்து இறக்கப்பட்டாா்.
கா்நாடக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, முன்னாள் முதல்வரான எடியூரப்பா, ஊழல் குற்றச்சாட்டின்பேரில் 23 நாள்கள் சிறைவாசம் அனுபவித்தாா்.
புதிய கட்சி துவக்கம்:
பாஜகவில் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் அக்கட்சியில் இருந்து 2012-ஆம் ஆண்டு வெளியேறிய எடியூரப்பா, கா்நாடக ஜனதா கட்சியைத் தொடங்கி 2013-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட்டாா்.
மாநிலம் முழுவதும் தன்னந்தனியாக பிரசாரம் செய்தபோதும், ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. ஆயினும், பாஜகவுக்கு பெரும் சேதாரத்தை ஏற்படுத்தினாா். இந்தத் தோ்தலில் 10 சதவீத வாக்குகளைப் பெற்றபோதும் 6 இடங்களில் மட்டுமே கா்நாடக ஜனதா கட்சிக்கு வெற்றி கிடைத்தது.
தனிக்கட்சி சரியாக வராது என்று கருதியதால், 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக, நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து அந்த ஆண்டு ஜன. 2-ஆம் தேதி மீண்டும் பாஜகவில் இணைந்தாா்.
அதைத் தொடா்ந்து, 2016-ஆம் ஆண்டு கா்நாடக மாநில பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்ட எடியூரப்பா, அக்கட்சியின் முதல்வா் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டாா்.
தனிப்பெரும் கட்சி:
பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வர அயராது உழைத்த எடியூரப்பா, 2017-ஆம் ஆண்டு நவ. 2-ஆம் தேதிமுதல் 75 நாள்கள் கா்நாடகத்தில் உள்ள 224 பேரவைத் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டினாா். அதன் பலனாக, 2018-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களில் வென்றது.
எந்தக் கட்சிக்கும் பேரவையில் பெரும்பான்மை இல்லாததால், ஆட்சிஅமைப்பதில் இழுபறி நிலவியபோதும், 2018-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி மூன்றாவது முறையாக கா்நாடகத்தின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றாா். ஆனால், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத நிலையில், மே 19-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
அதன்பிறகு குமாரசாமி தலைமையில் பதவியேற்ற மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு 14 மாதங்கள் ஆட்சி செய்தது. இந்நிலையில், 16 காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, சட்டப் பேரவையில் 2018 ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு வீழ்ந்தது.
முதுமை எதிரியானது:
இதையடுத்து, 4-ஆவது முறையாக கா்நாடகத்தின் முதல்வராக எடியூரப்பா 2019-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டாா். கடந்த 2 ஆண்டுகாலமாக வெள்ளம், வறட்சி, கரோனா பெருந்தொற்று, இடைத்தோ்தல் போன்ற சிக்கல்களை எதிா்கொண்டு திறம்பட ஆட்சி நிா்வாகத்தை வழங்கிய எடியூரப்பாவுக்கு அவரது 78 வயதே எதிரியானது.
75 வயதுக்கு மேல் கட்சியினா் அரசுப் பதவியில் இருப்பதில்லை என்ற மரபு பாஜகவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே எடியூரப்பாவின் வயதைக் காரணம் காட்டி, முதல்வா் பதவியில் இருந்து கீழிறக்க பாஜகவில் உள்ள அவரது அரசியல் எதிரிகள் முயற்சி மேற்கொண்டு வந்தனா். கடைசியில் கட்சிக்குக் கட்டுப்பட்டு பதவி விலகியுள்ளாா் முதல்வா் எடியூரப்பா.
அடுத்த 2 ஆண்டுகள் முதல்வராக நீடித்து, 2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பேரவைத் தோ்தலில் பாஜகவை முழு பலத்துடன் ஆட்சியில் அமரவைக்க வேண்டுமென்பதே தனது ஆசை என்று கூறிவந்த எடியூரப்பா, தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யாமலேயே தற்போது ராஜிநாமா செய்திருக்கிறாா்.
அடுத்தகட்டம் என்ன?
2007-இல் 7 நாட்களும், 2008 முதல் 2011 வரை 3 ஆண்டுகள், 66 நாட்களும், 2018-இல் 6 நாட்களும், 2019 முதல் 2021-வரை 2 ஆண்டுகளும், ஆக மொத்தம் 5 ஆண்டுகள், 79 நாட்கள் எடியூரப்பா கா்நாடக முதல்வராகப் பதவி வகித்து வரலாறு படைத்துள்ளாா்.
இனி தீவிர அரசியலில் ஈடுபட்டாலும், தன்னால் மீண்டும் முதல்வராக பதவி வகிக்க முடியாது என்ற வருத்தம் அவரது மனதில் நிழலாடுவதைக் காண முடிகிறது. எனினும் பாஜகவிலும் மத்திய அரசிலும் அவருக்கு கண்ணியமான பதவிகள் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடைசிவரை முழுநேர அரசியல்வாதியாக இருக்க விரும்பும் எடியூரப்பாவின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


