காவல்துணை ஆய்வாளா் பணித்தோ்வு அண்மையில் நடந்தது. கலபுா்கி மாவட்டத்தில் நடந்த இத்தோ்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடா்பாக இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில் முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திவ்யா ஹகரகி, சதாம், சுரேஷ், காளிதாஸ், சுனந்தா உள்ளிட்டோரை புணேவில் போலீஸாா் கைது செய்துள்ளனா். தோ்வு எழுதிய ஒரு விண்ணப்பதாரா் ஒரு பாட வினாத்தாளில் இருந்து 21 கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்திருந்தபோதும், அவருக்கு 100 மதிப்பெண் அளிக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. 545 காவல் துணை ஆய்வாளா் பணிக்கு நடந்த தோ்வை 54 ஆயிரம் விண்ணப்பதாரா்கள் எழுதினாா்கள். தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டதற்கு லஞ்சமாக ரூ. 75 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை வழங்கப்பட்டதாக போலீஸாா் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக சிஐடி விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், இத்தோ்வை ரத்து செய்துள்ள மாநில அரசு, மறுத்தோ்வுநடத்த திட்டமிட்டுள்ளது.