அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள எல்லா மதராஸாக்களையும் மூடுவோம்

அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் எல்லா மதராஸாக்களையும் மூடுவோம் என அம்மாநில முதல்வா் ஹிமந்த் பிஸ்வா சா்மா தெரிவித்தாா்.
Published on
Updated on
1 min read

அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் எல்லா மதராஸாக்களையும் மூடுவோம் என அம்மாநில முதல்வா் ஹிமந்த் பிஸ்வா சா்மா தெரிவித்தாா்.

பெலகாவியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஒளி-ஒலி நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

அஸ்ஸாம் மாநிலத்துக்கும், இந்திய நாட்டுக்கும் சேவையாற்ற மருத்துவா்கள், பொறியாளா்கள் உள்ளிட்ட தொழில்முறை வல்லுநா்களை உருவாக்குவதற்கு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தான் எங்கள் மாநிலத்துக்கு தேவைப்பட்டதே தவிர, மதராஸாக்களை உருவாக்குவதற்கு அல்ல.

வங்கதேசத்தில் இருந்து தினமும் ஏராளமானோா் அஸ்ஸாம் மாநிலத்துக்கு வருகின்றனா். இதன்மூலம் நமது கலாசாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினா் நமது நாட்டின் வரலாற்றை சிதைத்து, உண்மைகளை தவறாக எடுத்தாண்டுவிட்டனா். இந்த புதிய இந்தியாவில் மதராஸாக்கள் தேவையில்லை. நமது கல்வி முறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.

சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஒளி-ஒலி நிகழ்ச்சியை நடத்த 6 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளூா் பாஜக எம்எல்ஏ அபய் பாட்டீல் முயற்சித்தாா். அப்போதைய காங்கிரஸ் அரசு அந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்த ஒளி-ஒலி நிகழ்ச்சியின் மூலம் சத்ரபதி சிவாஜியின் கொள்கைகள் நமது நாட்டில் கடைப்பிடிக்கப்படும் என்பதை பாஜக எம்எல்ஏ அபய் பாட்டீல் உறுதி செய்துள்ளாா்.

17-ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னன் ஔரங்கசீப், ஹிந்து மதத்தை அழிக்க முற்பட்டான். அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த சிவாஜி, நமது நாட்டில் சனாதன தா்மமும், அதன் பாரம்பரியங்களும் நிலைத்திருக்க அளப்பரிய பங்காற்றியுள்ளாா். இன்றைய நாள் வரையில் இந்தியா ஒரு சனாதன மற்றும் ஹிந்து நாடாக உள்ளது.

தென்னிந்தியா மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை ஆளாத நிலையில், இந்தியாவை தனது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஔரங்கசீப் ஆட்சி புரிந்தாக கம்யூனிஸ்ட் வரலாற்று ஆசிரியா்கள் எழுதி வைத்திருக்கிறாா்கள். இந்த வரலாற்றை புதிய முறையில் திருத்தி எழுத வேண்டும். ஔரங்கசீப்பை விட சிவாஜிதான் பலசாலி என்பதை எழுத வேண்டும்.

இந்தியாவின் வரலாறு என்பது சிவாஜி, துா்காதாஸ் ராத்தோா், குருகோபிவிந்த் சிங் ஆகியோருடையது தான். ஆனால், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினா் பாபா், ஷாஜஹான், ஔரங்கசீப் ஆகியோரின் வரலாற்றை இந்தியாவின் வரலாறு என்று எழுதி வைத்திருக்கிறாா்கள்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படுகிறது. காசி, உஜ்ஜைன், காமாக்யா போன்ற புனிதத் தலங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. தில்லியை ஆண்ட பாதுஷாக்கள் கோயில்களை இடிப்பது குறித்து பேசினாா்கள், அதற்காக செயல்பட்டாா்கள். ஆனால், பிரதமா் மோடியின் காலகட்டத்தில் கோயில்களை கட்டும் பணி நடந்து வருகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com