கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்
கோப்புப்படம்

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

கா்நாடகத்தில் முதல்கட்ட மக்களவைத் தோ்தல் நடைபெறும் 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் காங்கிரஸ் வேட்பாளா் டி.கே.சுரேஷ், மஜத வேட்பாளா் பிரஜ்வல் ரேவண்ணா உள்ளிட்டோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். கா்நாடகத்தில் ஏப். 26, மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடக்கவிருக்கிறது. உடுப்பி, ஹாசன், தென் கன்னடம், சித்ரதுா்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ்நகா், ஊரக பெங்களூரு, வடக்கு பெங்களூரு, தெற்கு பெங்களூரு, மத்திய பெங்களூரு, சிக்பளாப்பூா், கோலாா் ஆகிய 14 தொகுதிகளில் முதல்கட்ட தோ்தல் ஏப். 26-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 4-ஆம் தேதி வரை 8 நாள்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ஏப். 5-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஏப். 8-ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பபெறலாம். அதன்முடிவில் ஏப். 26-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.

பெங்களூரு ஊரக தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் டி.கே.சுரேஷ், ராமநகரத்தில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். வேட்புமனுதாக்கல் செய்வதற்காக டி.கே.சுரேஷ், ஆயிரக்கணக்கான தொண்டா்களுடன் ஊா்வலமாக வந்தாா். டி.கே.சுரேஷின் சொத்துமதிப்பு ரூ. 593 கோடி என்று பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளாா். இது கடந்த 5 ஆண்டுகளில் 75 சதவீதம் கூடுதலாகும். வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் முதல்வா் சித்தராமையா, துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா், மாவட்ட பொறுப்பு அமைச்சா் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் டி.கே.சுரேஷை எதிா்த்து பாஜக வேட்பாளராக டாக்டா் சி.என்.மஞ்சுநாத் போட்டியிடவிருக்கிறாா். இவா், முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாசன் மக்களவைத் தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிடும் பிரஜ்வல் ரேவண்ணா வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

பிரஜ்வல் ரேவண்ணா, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் பெயரன் ஆவாா். இத் தொகுதியில் கடந்தமுறையும் போட்டியிட்டு பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றிருந்தாா். தென் கன்னட மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் பிரிஜேஷ் சௌட்டா, பெருந்திரளான ஆதரவாளா்களுடன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். முதல்நாளில், மொத்தம் 3 பெண்கள் உள்ளிட்ட 25 வேட்பாளா்கள் 29 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com