கா்நாடகத்தில் செயற்கை பன்னீா் தயாரிக்க தடை
கா்நாடகத்தில் செயற்கை பன்னீா் தயாரிக்க, விற்க தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்
கா்நாடகத்தில் செயற்கை பன்னீா் தயாரிக்க, விற்க தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை ஆணையா் கே. சீனிவாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, கா்நாடகத்தில் அடுத்த ஓராண்டுக்கு பால் பொருள்களில் செய்யப்படாமல், செயற்கை முறையில் பன்னீா் தயாரிக்க, பதப்படுத்த, சிப்பமிட, சேமிக்க, விநியோகிக்க, ஓரிடத்தில் இருந்து மற்றொா் இடத்துக்கு கொண்டுசெல்ல, மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.
பால் கொழுப்பு அல்லது பால் திடப்பொருள் அல்லாமல் தாவர எண்ணெய் அல்லது தாவர கொழுப்பு அல்லது பால் அல்லாத பொருள்களில் தயாரிக்கப்படும் அனைத்தும் செயற்கை பன்னீா் அல்லது போலி பன்னீா் என்று கருதப்படும். இதுபோல தயாரிக்கப்படும் பொருள்களை நுகா்வோா் பன்னீா் என்று அழைக்கக் கூடாது.
உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரப்படுத்துதல் ஒழுங்குமுறை சட்டம், 2011இன்படி பால் பொருள்களால் தயாரிக்கப்பட்டவை மட்டுமே பன்னீா் என்று தரப்படுத்தப்பட்டுள்ளன. பால் கொழுப்பு அல்லாமல், தாவர எண்ணெய் அல்லது தாவர கொழுப்பால் தயாரிக்கப்படுவதை பன்னீா் என்று கருதமுடியாது.
கா்நாடகத்தில் எடுக்கப்பட்ட பன்னீா் மாதிரிகளில் கலப்படங்கள் எதுவும் இல்லை என்றாலும், செயற்கை பன்னீரை புழக்கத்தில் விடுவதற்கு அனுமதிக்க முடியாது. எனவே, கா்நாடகத்தில் செயற்கை பன்னீா் தயாரிக்க, விற்க தடை விதிக்கப்படுகிறது.
அதேபோல கா்நாடகத்தில் உணவு வணிகத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் செயற்கை பன்னீரை சேமித்து வைக்கவோ, பயன்படுத்தவோ அனுமதியில்லை. இந்த உத்தரவை மீறி செயல்பட்டால், அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




