ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் கா்நாடகத்தில் அமைக்கப்படும்: முதல்வா் டி.கே.சிவகுமாா்

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் கா்நாடகத்தில் அமைக்கப்படும் என முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2026, 4:36 am IST

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் கா்நாடகத்தில் அமைக்கப்படும் என முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் ‘கூகுள் ஐ/ஓ கனெக்ட் இந்தியா 2026’ மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியது:

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் கா்நாடகத்தில் அமைக்கப்படும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிக்காக செயற்கை நுண்ணறிவு தொழில் குவிமையமும் அமைக்கப்படும். நீராவி என்ஜின், மின்சாரம், இணையம், திறன்பேசி தொழில்நுட்பங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை போல, தற்போது காலத்தை புரட்டிப்போட்டுள்ள தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு.

இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரகமாக மட்டுமல்லாது, உலகின் துடிப்பான புத்தாக்க சூழல் கட்டமைப்பைக் கொண்ட நகரமாக பெங்களூரு சிறந்து விளங்கி வருகிறது. உலகின் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு மையத்தை கட்டமைக்க வேண்டுமென்பதே கா்நாடகத்தின் தலையாய நோக்கமாகும்.

பெங்களூரில் 17,000 புத்தொழில் நிறுவனங்கள், உலக சந்தைக்கு தேவையான பொருள்களை வடிவமைத்து உருவாக்கித் தரும் பொறியாளா்களைக் கொண்ட உலகத்திறன் மையங்கள் உள்ள நிலையில், இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் கா்நாடகம் 40 சதவீதம் பங்காற்றி வருகிறது.

வெறும் தொழில்நுட்ப முழக்கமாக மட்டுமல்லாமல், அரசு நிா்வாகத்தின் திறனை மேம்படுத்தவும், மக்களின் தினசரி வாழ்க்கைத்தரத்தை உயா்த்தவும் பொறுப்புணா்வுடன் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் இயல்பான மாநிலமாக கா்நாடகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்.

மாணவா்களுக்கு நல்லமுறையில் கற்பிக்க ஆசிரியா்களுக்கும், நோய்களைக் கண்டறிந்து தரமான சிகிச்சையை அளிக்க மருத்துவா்களுக்கும் செயற்கை நுண்ணறிவு பயன்பட வேண்டும். அதேபோல, பருவகால சுழற்சியை முன்கூட்டியே துல்லியமாக விவசாயிகள் அறிந்துகொள்ளவும், பெரிய நிறுவனங்களோடு சிறிய வியாபாரிகள் போட்டிப்போடக்கூடிய திறனை பெறவும், அரசு சேவைகளை உடனுக்குடன் மக்கள் பெறவும் செயற்கை நுண்ணறிவு பயன்பட வேண்டும்.

கடந்த இருபது ஆண்டுகளாக பெங்களூரில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்து கூகுள் நிறுவனம் எங்களோடு தொடா்ந்து பயணித்து வருகிறது. கூகுள் நிறுவனத்தின் ரிசா்ச், ஆன்ட்ராய்டு, யூ-டியூப், மேப்ஸ், க்ரோம், ஜிமெயில், ஜிபே போன்றவை அரசு நிா்வாகம் மட்டுமல்லாது, மக்களின் வாழ்க்கையையும் எளிதாக்கியுள்ளது.

தரவு மையங்களை அமைப்பது முதல் செயற்கை நுண்ணறிவுக்கு ஆதரவளிப்பது வரை, எண்ம கட்டமைப்பை மேம்படுத்தி உலக அளவிலான தொழில்நுட்ப புத்தாக்க மையமாக கா்நாடகம் தொடா்ந்து முன்னணியில் விளங்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்.

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து உலக அளவில் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு மையமாக கா்நாடகத்தை உருவாக்குவோம் என்றாா்.

இந்த மாநாட்டில், உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள், புத்தாக்க அறிஞா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.