'இன்றைய உலகம் தகவல் பெருவெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. ஒரு காலத்தில் நூலகங்களையும், ஆசிரியர்களையும் மட்டுமே நம்பியிருந்த அறிவுத் தேடல், இன்று திறந்தவெளியில் இணையத்திலேயே அனைவருக்கும் கிடைக்கிறது. மொழி, நாடு, பொருளாதார நிலை என எந்தத் தடையும் இல்லாமல், ஒருவரால் தன்னுடைய கைப்பேசியிலேயே உலகத்தரம் வாய்ந்த பாடங்களைக் கற்க
முடியும். இது அறிவை அடைவதில் இருந்த பெரும் தடையை உடைத்திருக்கிறது' என்கிறார் சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்லூரியின் சமூகப் பணிப் பேராசிரியர் வீ. வெங்கடேஷ்.
'இன்றைய இளைய தலைமுறையினர் இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் மூழ்கி, தங்களது வாழ்க்கையைப் பாதித்துக் கொள்கிறார்கள்' என்று கூறப்படும் நிலையில், அவற்றை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தி, வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளலாம் என்று மாணவர்களிடையேயும், இணையவழியிலும் வழிகாட்டி வரும் வீ.வெங்கடேஷிடம் பேசியபோது:
'அறிவு கிடைப்பது மட்டும் போதுமா? இல்லை. அறிவைப் பெறுவதற்கான மனப்பான்மையும், அதை உள்வாங்கி அறிவுத் திறனாக மாற்றும் திறனும்தான் இப்போது முக்கியமாகிறது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள், ஆயிரக்கணக்கான பாடங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிப்
பிடித்து, புரிந்து, தன் அறிவு வளர்சிக்குப் பயன்படுத்தும் மனநிலை உள்ளவனே உண்மையான வெற்றியாளன். அறிவு திறந்திருக்கிறது. ஆனால், அதைப் பெறும் ஆர்வம் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்க வேண்டும். அதுதான் இன்றைய மிகப்பெரிய தகுதி.
இந்தத் தருணத்தில் செயற்கை நுண்ணறிவு, அதாவது ஏ.ஐ. நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நுழைந்துவிட்டது. ஏ.ஐ. நமக்கு வேலைகளை எளிதாக்குகிறது, தகவல்களை உடனே தருகிறது, பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்கிறது. ஆனால், இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. ஏ.ஐ.யைப் பயன்படுத்துவது ஒன்று, ஏ.ஐ.யைப் புரிந்து அதைக் கட்டுப்படுத்தி நம்முடைய வளர்சிக்குப் பயன்படுத்துவது வேறொன்று.
'இயற்கை நுண்ணறிவு' எனப்படும் மனித மூளையின் சிந்தனை, படைப்பாற்றல், முடிவெடுக்கும் திறன், பச்சாதாபம் இவற்றை வைத்துத்தான் செயற்கை நுண்ணறிவை நாம் வழிநடத்த வேண்டும். ஏ.ஐ. நம்மை ஆளக் கூடாது, நாம்தான் ஏ.ஐ.யை ஆள வேண்டும்.
இதுதான் இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலாகும். பட்டனை அழுத்தி பதில் வாங்கும் பழக்கத்தைவிட்டு, ஏன் அந்தப் பதில் வந்தது, அதன் பின்னால் உள்ள தர்க்கம் என்று கேள்வி கேட்கும் திறன் வளர வேண்டும். இல்லையென்றால் நாம் தொழில்நுட்பத்தின் பயனாளராக மட்டும் இருந்துவிடுவோம், படைப்பாளியாக மாற முடியாது.
இந்தச் சவாலை எதிர்கொள்ள இளைஞர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள ஒரு வலுவான கருவி தேவை.
ஒரு மாணவன் தான் கற்றதை 'லிங்க்டு இன்' இல் பதிவிடலாம். தன் ஆராய்சிக் கட்டுரையை 'எக்ஸ்'-இல் பகிரலாம். தன் திட்டப்பணியை 'டூடியூப்'-இல் விளக்கலாம். தங்களுடைய தனித் திறன்களை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் உலகுக்குக் காட்டலாம். இது வெறும் அடையாளம் அல்ல; இது டிஜிட்டல் முத்திரை. வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு, ஆராய்ச்சி வாய்ப்பு அனைத்தும் இனி இந்த டிஜிட்டல் முத்திரையை வைத்தே முடிவாகும்.
ஆகவே, திறந்த மூல அறிவு கிடைக்கும் இக்காலத்தில் இளைஞர்கள் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று: கற்பதற்கான நேர்மறை மனப்பான்மை. இரண்டு: கற்றதை உலகுக்குச் சொல்லும் சமூக ஊடக இருப்பு.
ஏ.ஐ. காலத்தில் வெற்றி பெற வேண்டும் எனில், இயற்கை நுண்ணறிவைக் கொண்டு செயற்கை நுண்ணறிவை வழிநடத்தி, தன் குரலை டிஜிட்டல் உலகில் பதிவு செய்யும் துணிவு ஒவ்வொரு இளைஞனுக்கும் அவசியம். எதிர்காலம் அறிவுள்ளவர்களுக்கு மட்டுமல்ல; தன் அறிவை உலகுக்கு எடுத்துச் செல்பவர்களுக்கே சொந்தம்' என்கிறார் வீ.வெங்கடேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







