புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மாயம் செய்யும் மௌனம்

நிரஞ்சனின் உலகம் எப்போதும் ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் இருந்தது.

News image
Updated On :5 ஜூலை 2026, 4:02 am IST

நிரஞ்சனின் உலகம் எப்போதும் ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் இருந்தது. அந்த குடுவைக்கு வெளியே காஞ்சனா என்ற ஒரு ஜீவன், அவனுக்காக ஓடிக்கொண்டிருப்பது அவனுக்குத் தெரியும், ஆனால் புரியாது. அவள் சமையலறையில் பாத்திரங்களை கையாளும் ஓசை அவனுக்கு ஒரு தூரத்து இசை போலத்தான் கேட்கும். அந்த இசையில் கலந்திருக்கும் களைப்பை அவன் ஒருபோதும் உணர முற்பட்டதில்லை.

'நிரஞ்சன், கொஞ்சம் காய்கறி நறுக்கித் தர்றீங்களா?' என்று அவள் கேட்கும்போதெல்லாம், 'இதோ வர்றேன்...' என்று சொல்லிவிட்டு, கையில் இருக்கும் புத்தகத்திலோ அல்லது மொபைல் திரையிலோ மூழ்கிவிடுவான். அவன் சோம்பேறி அல்ல; ஒருவேளை அந்த வேலையைத் தான் சரியாகச் செய்யாமல் போனால், காஞ்சனா கிண்டல் செய்வாளோ? என்ற ஒரு நுட்பமான தாழ்வு மனப்பான்மை அவனுக்குள் ஒளிந்திருந்தது.

தன்னம்பிக்கைக்கும் தற்பெருமைக்கும் இடையே ஊசலாடும் அவனது மனநிலை, ஒரு எளிய வீட்டு வேலையைக்கூட ஓர் இமாலய சவாலாக அவனுக்குக் காட்டியது. ஆனால், காஞ்சனாவின் பார்வையில் அவன் ஒரு முழுநேர சோம்பேறி.

ஒரு திங்கள்கிழமை காலை. வீடே நிசப்தமாக இருந்தது. காஞ்சனா வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தாள். அன்று நிரஞ்சனுக்குள் ஏதோ ஒன்று பொறி தட்டியது. 'ஏன் என்னால் முடியாது?' என்ற கேள்வி அவனை உந்தித்தள்ளியது. அடுத்த இரண்டு நாள்கள் நிரஞ்சன் வேறு மனிதனாக மாறினான். அவள் கேட்பதற்கு முன்பே காய்கறிகள் நறுக்கப்பட்டு தட்டில் வைக்கப்பட்டிருந்தன. கலைந்து கிடந்த துணிகள், வண்ணங்களின் அடிப்படையில் நேர்த்தியாக மடிக்கப்பட்டு அடுக்கப்பட்டன.

அவனது விரல்கள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் இயங்கின. தேய்ந்து போன நம்பிக்கையைத் துடைத்து எடுப்பது போல, அவன் வீட்டின் ஒவ்வொரு மூலையையும் செதுக்கினான். இரண்டு வருடங்களாகத் தேங்கிக் கிடந்த ஒட்டடைகளும், பழைய டயர்களும் அப்புறப்படுத்தப்பட்டு கேரேஜ் பளிச்சிட்டது. புதன்கிழமை மாலை, காஞ்சனா வீட்டுக்குள் நுழைந்தபோது வீடு மல்லிகைப்பூ மணமாக இருந்தது. நிரஞ்சன் தன் புத்தக அலமாரியை மிக அழகாக அடுக்கிக் கொண்டிருந்தான். காஞ்சனா அவனைப் பார்த்தாள். அவள் கண்களில் ஒரு மின்னல்.

'நிரஞ்சன்...' என்று அவள் மென்மையாக அழைத்தாள். பல மாதங்களுக்குப் பிறகு அவள் வாயால் தன் பெயரை அவ்வளவு அன்பாகக் கேட்டதும், அவனுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது. 'உன்னால இதெல்லாம் இவ்வளவு அழகா செய்ய முடியும்னு எனக்குத் தெரியும். ஐ டிரஸ்ட் யூ' என்றாள்.

அவளது அந்தச் சிறு அங்கீகாரம், வறண்டு கிடந்த அவனது மனப் பாலைவனத்தில் பெய்த முதல் மழையைப் போல இருந்தது. அந்த ஒற்றை வார்த்தை அவனை அலுவலகத்திலும் ஒரு புலியாக மாற்றியது.

மேலதிகாரியின் பாராட்டு, நண்பர்களின் ஆச்சரியம் என நிரஞ்சன் ஒரு சூப்பர்மேனாக உணரத் தொடங்கினான். மகிழ்ச்சியின் உச்சியில் இருந்த நிரஞ்சனுக்கு ஒரு சின்ன சந்தேகம் எழுந்தது.

காஞ்சனா அவனிடம் காட்டும் அன்பு, ஒரு தாய்க்கு தன் குழந்தையிடம் இருக்கும் அன்பைப் போல இருந்தது. அவள் அவனைப் பாராட்டும் விதம், ஒரு வேலையைச் சரியாகச் செய்து முடித்த வேலையாளைப் பாராட்டுவது போலத் தோன்றியது. இந்த அதீதப் பாராட்டுகளின் பின்னணியில் ஏதோ ஒரு கணக்கு இருப்பதாக அவனது தர்க்க ரீதியான மனம் எச்சரித்தது.

அன்று இரவு காஞ்சனா குளிக்கச் சென்றபோது, அவளுடைய டைரி மேஜை மேல் திறந்திருந்தது. அதில் சமீபத்திய பக்கத்தைப் புரட்டினான். அங்கே அவள் எழுதியிருந்த வரிகள் அவனது இதயத்

துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்தியது. 'மருத்துவர் சொன்னது சரிதான்... என் அன்பு உண்மையானதுதான். ஆனால், அது இப்போது ஒரு சிகிச்சையாக மாறிவிட்டது வருத்தமே'.

நிரஞ்சன் அதிர்ந்து போனான். தனக்கு ஏதோ மனநலப் பாதிப்பு இருப்பதாக அவள் கருதி, ஒரு நாடகத்தை ஆடுகிறாளா? கோபம் தலைக்கேற, அவள் குளித்துவிட்டு வரும்வரை காத்திருந்தான். அவள் வந்ததும் டைரியைக் காண்பித்து கத்தினான். 'என்னை என்ன பைத்தியம் என்று நினைத்தாயா? நீ காட்டும் அன்பு வெறும் சிகிச்சையா?'

காஞ்சனா அமைதியாக அவனைப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கின. 'நிரஞ்சன், அந்த டைரி உன்னுடையது...' நிரஞ்சன் குழப்பத்துடன் அந்தத் தாள்களை மீண்டும் பார்த்தான். அது அவனுடைய கையெழுத்து! அதில் 'நிரஞ்சன்' என்று மூன்றாவது மனிதனைப் போல தன்னைத் தானே குறிப்பிட்டுக் கொண்டு அவன் எழுதியிருந்தான்.

காலம் அவனது நினைவுகளை ஒரு அழிப்பான் கொண்டு அழித்துக் கொண்டே இருந்தது. அவன் தனக்குத் தானே ஒரு மருத்துவரைப் போலவும், ஒரு நோயாளியைப் போலவும் மாறி மாறி எழுதியிருந்த வரிகள் அவை. உண்மையில், நிரஞ்சனுக்குத் தீவிரமான 'டிசோசியேட்டிவ் அம்னீசியா' பாதிப்பு இருந்தது. அவன் செய்த பல வேலைகள் அவனுக்கே நினைவிருக்காது. காஞ்சனா அவனைச் சோம்பேறி என்று சொன்னது கூட, அவன் எதையாவது செய்யத் தூண்டுவதற்காகத்தான். அவன் செய்த அந்த மாற்றங்கள், அவன் பார்த்த அலுவலக வேலைகள் எல்லாமே காஞ்சனா அவனுக்குப் பின்னணியில் இருந்து கொடுத்த ஊக்கம்.

அவன் தன்னை ஒரு வெற்றியாளனாகக் கருதியது கூட ஒரு மாயை. ஆனால், அந்த மாயையை உருவாக்கியது காஞ்சனாவின் அசாத்தியமான காதல். 'பரவாயில்லை நிரஞ்சன்... இன்று உனக்கு உன் கையெழுத்தே அடையாளம் தெரியவில்லை. ஆனால், நீ

அடுக்கி வைத்த புத்தகங்கள் இப்போதும் நேர்த்தியாக இருக்கிறது. அது போதும் எனக்கு' என்று அவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளது அணைப்பில் இருந்த வெப்பம், அவனது குழப்பமான மனதுக்கு ஒரு நங்கூரமாக அமைந்தது. அவனது அடையாளங்கள் தொலைந்தாலும், அவள் காட்டும் அந்தப் பிம்பத்தையே அவன் தன் உண்மையாக ஏற்கத் துணிந்தான். ஆனால், அவனது தர்க்க ரீதியான மனம் இன்னும் முழுமையாக அமைதி பெறவில்லை. அவனது நினைவுகள் கலைந்த மேகங்களைப் போல வடிவம் மாறிக்கொண்டே இருப்பவை.

அவன் ஒரு காலத்தில் மென்பொருள் நிறுவனத்தில் சிறந்த திட்ட மேலாளராக இருந்தவன். கூர்மையான தர்க்க அறிவும், எதையும் திட்டமிட்டுச் செய்யும் குணமும் அவனது இயல்பு.

ஆனால், இந்த 'டிசோசியேட்டிவ் அம்னீசியா' பாதிப்பு அவனது சுய அடையாளத்தை ஒரு சிலந்தி வலையைப் போலப் பின்னிவிட்டது. அவனுக்குத் தன் கடந்த காலத்தின் சில பகுதிகள் அடியோடு மறந்துவிடும்; அதே நேரத்தில், ஏதேனும் ஒரு புதிய விஷயத்தில் கவனம் செலுத்தினால், அதில் தன்னை முழுமையாக இழந்துவிடுவான். தன் கட்டுப்பாட்டை மீறித் தன் நினைவுகள் நழுவுவதை அவனது ஆண் ஆதிக்க மனமும், தற்பெருமை குணமும் ஒப்புக்கொள்ள மறுத்தன. அதனால்தான், தனக்கு ஏற்படும் மறதியை மறைக்க அவன் தன்னைச் சுற்றி ஒரு தற்காப்பு வளையத்தை உருவாக்கிக் கொண்டு, காஞ்சனாவைச் சோம்பேறித்தனமாகக் குற்றம் சாட்டி வந்தான்.

மறுபுறம், காஞ்சனா அமைதியின் உருவம். அவளும் ஒரு பட்டதாரிதான் என்றாலும், நிரஞ்சனின் இந்த விசித்திரமான மனநிலையைக் கையாள்வதற்காகவே தன் சுய விருப்பங்களையும், கனவுகளையும் தள்ளி வைத்தவள். அவள் வெறும் இல்லத்தரசி மட்டுமல்ல; நிரஞ்சனின் சிதைந்துபோகும் நினைவுகளுக்குப் பின்னால் நின்று அதைத் தாங்கிப் பிடிக்கும் ஒரு நிழல் மேலாளர்.

அவனது கோபம், தாழ்வு மனப்பான்மை, திடீர் மாற்றங்கள் என அனைத்தையும் அவள் தன் மெளனத்தாலேயே எதிர்கொண்டாள். நிரஞ்சன் தன்னைச் சோம்பேறி என்று நினைப்பதைக் கூட அவள் சகித்துக் கொண்டாள். ஏனென்றால், அவனுக்கு உண்மை தெரிந்தால் அவனது சுயமரியாதை உடைந்து, அவன் இன்னும் ஆழமான மன அழுத்தத்துக்குச் சென்றுவிடுவான் என்று அவள் பயந்தாள்.

இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு என்பது, கடலுக்கும் கரைக்கும் உள்ள தொடர்பு போன்றது. நிரஞ்சன் அலைகளைப் போல அடிக்கடி எழும்பி ஆர்ப்பரிப்பான்; காஞ்சனா கரையாய் நின்று அனைத்தையும் உள்வாங்கிக் கொள்வாள். இத்தனை வருடத் திருமண வாழ்க்கையில் அவர்கள் இருவரையும் பிணைத்து வைத்திருப்பது ஒரு பொதுவான புள்ளி... அதுதான் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் ஆழமான காதல்.

நிரஞ்சனுக்குக் காஞ்சனா இல்லாமல் ஒரு நொடியும் நகர முடியாது என்பது அவனது ஆழ்மனதுக்குத் தெரியும். காஞ்சனாவுக்கும், நிரஞ்சனின் இந்த பலவீனமான நிலையே அவனைக் குழந்தையைப் போலப் பார்த்துக் கொள்ளும் தாய்மையைக் கொடுத்திருந்தது.

அவள் அறையின் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தாள். அவர்களின் கல்லூரி காலத்து காதல் நினைவுகள் அவள் மனதில் நிழலாடின. அன்று நிரஞ்சன் எவ்வளவு சுறுசுறுப்பானவன்! கவிதைகள் எழுதுவான், மேடைகளில் பேசுவான். அவனது அந்தப் புத்திசாலித்தனத்தைக் கண்டுதான் அவள் வியந்து போனாள்.

ஆனால், திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஒரு விபத்தும், அதைத் தொடர்ந்த பணி நெருக்கடியும் அவனது மூளையின் நினைவகப் பகுதியைச் சிதைத்துவிட்டன. மருத்துவர்கள் கைவிரித்த போதும், காஞ்சனா கைவிடவில்லை.

'நிரஞ்சன், டைரி என்பது நம் நினைவுகளின் சேமிப்புக் கிடங்கு மட்டுமில்லை. சில நேரங்களில் அது நம்மை நாமே மீட்டெடுக்கும் ஒரு கண்ணாடி' என்று காஞ்சனா அவனது தோளைத் தொட்டு மென்மையாகக் கூறினாள்.

அவள் கைகளின் ஸ்பரிசம் நிரஞ்சனை அமைதிப்படுத்தியது. அவன் அந்தப் புத்தக அலமாரியை மீண்டும் தொட்டுப் பார்த்தான். 'காஞ்சனா, எனக்குப் பயமாக இருக்கிறது. இன்று என் கையெழுத்து எனக்கு மறந்துவிட்டது. நாளை உன் முகமே எனக்கு மறந்துவிட்டால் நான் என்ன செய்வேன்?' என்று அவனது குரலில் முதல்முறையாகத் தற்பெருமை உடைந்து, ஒரு குழந்தையின் பயம் வெளிப்பட்டது.

காஞ்சனா புன்னகைத்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தாலும், அதில் ஓர் அசாத்தியமான துணிச்சல் இருந்தது. 'உன் மூளை என் முகத்தை மறந்தாலும், உன் இதயம் என்னை மறக்காது நிரஞ்சன். ஏனென்றால், நீ ஒவ்வொரு முறையும் புதிதாகப் பிறக்கும்போது, உன்னை உனக்கு அறிமுகப்படுத்துவது இந்த காஞ்சனாதான். உன்னுடைய இந்த நிலைக்கு மருத்துவர்கள் பல பெயர்களைச் சொல்லலாம். ஆனால், எனக்கு இது உன்னை மீண்டும் மீண்டும் காதலிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பு' என்றாள்.

அன்று இரவு, நிரஞ்சன் தன் பழைய நாள்குறிப்புகளை ஒவ்வொன்றாகப் புரட்டினான். அதில் பல பக்கங்கள் அவனால் எழுதப்பட்டு, அவனாலேயே மறக்கப்பட்டிருந்தன. சில பக்கங்களில் அலுவலக வேலைகளின் விவரங்கள், சிலவற்றில் காஞ்சனாவுக்கு அவன் எழுதிய கவிதைகள். உண்மைதான். அவனது நினைவுகள் அவனுக்குத் துரோகம் செய்திருக்கலாம். ஆனால், காஞ்சனாவின் அன்பு அவனுக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

ஓய்வு சிலசமயம் அழகு தருகிறது. இயக்கம் சில சமயங்களில் இன்னும் அழகு தருகிறது என்பது போல இருந்தது நிரஞ்சனின் சில செயல்பாடுகள்.

அவன் இப்போது மீண்டும் அந்தப் புத்தக அலமாரியைப் பார்த்தான். அது அழகாகத்தான் இருந்தது. அது தான் அடுக்கினோம் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், காஞ்சனா சொல்கிறாள் என்றால், அது உண்மையாகத்தான் இருக்கும். சில நேரங்களில் உண்மையை விட நம்பிக்கையே வாழ்வைத் தக்க வைக்கிறது.

தன் அடையாளத்தைத் தேடி அலைவதை விட, காஞ்சனா காட்டும் பிம்பத்தில் தன்னை முழுமையாக ஒப்படைப்பதே புத்திசாலித்தனம் என்று அவனது தர்க்கரீதியான மனம் இறுதியாக ஒத்துக் கொண்டது. அவன் தன் கையில் இருந்த பேனாவை எடுத்து, அந்த டைரியின் புதிய பக்கத்தில் எழுதினான்: 'என் பெயர் நிரஞ்சன். எனக்குப் பல விஷயங்கள் மறந்து போகலாம். ஆனால், காஞ்சனா என்ற ஒரு தேவதை என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் எனக்கு எப்போதும் நினைவிருக்கும்.'

எதுவும் தாமதமாகிவிடவில்லை. இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும் என்று நிரஞ்சன் தீவிரமாக நம்பினான் போலும்.

அவன் எழுதி முடித்ததும், காஞ்சனா அவனுக்குப் பிடித்த காபியைக் கொண்டு வந்து நீட்டினாள். அந்த அறையில் நிலவிய மெளனம் இப்போது அவனுக்குப் பயத்தைத் தரவில்லை; மாறாக, அது அவனுக்குள் ஒரு பேரமைதியையும் நம்பிக்கையையும் விதைத்தது. சில நேரங்களில், எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதை விட, சில விஷயங்களை அறியாமல் இருப்பதே வாழ்க்கையை அழகாக்குகிறது. அவனது மெளனமும் அவளது காதலும் இணைந்து அந்த வீட்டை மீண்டும் ஒரு நந்தவனமாக மாற்றத் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.