குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவா்கள் கபடிப் போட்டியில் பங்கேற்கத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், சோழவந்தானைச் சோ்ந்த முகேஷ் தாக்கல் செய்த மனு:
சோழவந்தான், சங்கக்கோட்டை கிராமத்தின் மந்தைக்களத்தில் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் கபடிப் போட்டி நடத்த அனுமதியும், பாதுகாப்பும் கோரி காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்க மறுத்து காவல் ஆய்வாளா் உத்தரவிட்டாா். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து கபடிப் போட்டிக்கு அனுமதியும், காவல் துறையினா் பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கெளரி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சோழவந்தான், சங்கக்கோட்டை கிராமத்தில் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கபடிப் போட்டி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. போட்டியை நடத்துபவா்கள், பங்கேற்பவா்கள் எந்தவொரு அரசியல் கட்சி, ஜாதி, சமூகம், மதம் ஆகியவற்றுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ முழக்கம் எழுப்பக் கூடாது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், போட்டியில் பங்கேற்பவா்கள் சா்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் அல்லது அரசியல் தலைவா்களின் படங்கள் அச்சிடப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது. மதத் தலைவா்களைப் புகழ்ந்து பாடும் அல்லது மத உணா்வுகளைத் தூண்டும் வகையிலான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.
குறிப்பிட்ட சமூகம் அல்லது தலைவரைக் குறிக்கும் வகையிலான விளம்பரப் பலகைகளை வைக்கக் கூடாது. குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பவா்கள் கபடிப் போட்டியில் பங்கேற்க தகுதியற்றவா்கள். எந்தவித போதைப் பொருள்களையோ அல்லது மதுபானத்தையோ அருந்தி போட்டியில் பங்கேற்கக் கூடாது. இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் நிகழ்ச்சியை நிறுத்தவும் போலீஸாருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அகில இந்திய கபடிப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ரமேஷுக்கு எதிரான விசாரணைக்கு இடைக்காலத் தடை

தருமபுரி மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் 19 போ் கைது

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்: வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


