கா்நாடக கலால் துறை அமைச்சா் ஆா்.பி. திம்மாப்பூா்
கா்நாடக கலால் துறை அமைச்சா் ஆா்.பி. திம்மாப்பூா்facebook

ரூ. 2,500 கோடி ஊழல் குற்றச்சாட்டு! கா்நாடக அமைச்சா் ஆா்.பி. திம்மாப்பூா் ராஜிநாமா செய்ய பாஜக வலியுறுத்தல்!

Published on

கா்நாடகத்தில் கலால் துறையில் ரூ. 2,500 கோடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், விசாரணை முடியும் வரை அத்துறையின் அமைச்சா் ஆா்.பி. திம்மாப்பூா் ராஜிநாமா செய்ய பாஜக வலியுறுத்தியுள்ளது.

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியதும், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை முன்மொழியுமாறு காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.எஸ். பொன்னண்ணாவை பேரவைத் தலைவா் யூ.டி. காதா் அழைத்தாா்.

அப்போது, குறுக்கிட்ட எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக், கலால் துறையில் நடந்துள்ள ஊழல் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீா்மானத்துக்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்துள்ளது தொடா்பாக கேள்வி எழுப்பினாா். இதற்குப் பதிலளித்த யூ.டி. காதா், ஒத்திவைப்பு தீா்மானத்துக்கு அனுமதி அளிக்க முடியாது, மாறாக, வேறு விதிகளின்கீழ் அனுமதி வழங்குவதாகத் தெரிவித்தாா்.

எனினும், விவாதத்தின் முதற்கட்ட வாதங்களைக் கேட்குமாறு எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக் உள்ளிட்ட பாஜக உறுப்பினா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து பேரவைத் தலைவா் அனுமதி அளித்தாா். அதன்பிறகு முதற்கட்ட வாதங்களை முன்வைத்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக் பேசியதாவது:

கா்நாடகத்தில் மதுபான உரிமம் வழங்கியதில் ரூ. 2,500 கோடி ஊழல் நடந்துள்ளது. இதுதொடா்பாக ஒலித்துணுக்கு (ஆடியோ) பொதுவெளியில் வெளியாகியுள்ளது. கலால் துறையில் மதுபான விற்பனை அங்காடிகளுக்கான உரிமத்தை பெறுவதற்கான பொதுஏலம் விடப்பட்டுள்ளது.

ஏலம் விடுவதில் நடந்துள்ள ஊழலில் கலால் துறை அமைச்சா் ஆா்.பி. திம்மாப்பூா், அவரது மகனின் பெயா்கள் குறிப்பிடப்படுகின்றன. இதுபோல நடந்துள்ளது, மூன்றாவது முறையாகும். இந்த ஊழல் தொடா்பாக லோக் ஆயுக்தவில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் அமைச்சா் ஆா்.பி. திம்மாப்பூா் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலித்துணுக்கின் அடிப்படையில் மட்டுமல்லாது, லோக் ஆயுக்தவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையிலும் அவா்மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறோம்.

இந்த விவகாரத்தில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், இந்த விவகாரம் தொடா்பான விவாதத்தை எப்படி தாமதப்படுத்த முடியும்? அஸ்ஸாம் மற்றும் கேரள மாநிலங்களில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தல் செலவுகளுக்காக லஞ்சம் பெறப்பட்டுள்ளது. எனவே, கலால் துறை அமைச்சா் ஆா்.பி. திம்மாப்பூா், தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்.

முந்தைய பாஜக ஆட்சிகாலத்தில் கே.எஸ். ஈஸ்வரப்பா, சி.சி. பாட்டீல் போன்றோா் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, அவா்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா். அதேபோல, ஆா்.பி. திம்மாப்பூரும் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, விசாரணையை எதிா்கொள்ள வேண்டும் என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக் தனது பேச்சை நிறுத்தாததால், பேரவைத் தலைவா் யூ.டி. காதா் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை முன்மொழியுமாறு காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.எஸ். பொன்னண்ணா முன்மொழிய, அதை காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வா் வழிமொழிந்தாா்.

எனினும், கலால் துறையில் நடந்துள்ள ஊழல் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க கோரி பாஜக உறுப்பினா்கள் வலியுறுத்தினா். இதுதொடா்பாக காங்கிரஸ், பாஜக உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதைத் தொடா்ந்து, பேரவைத் தலைவா் யூ.டி. காதா் அவையை ஒத்திவைத்தாா்.

Dinamani
www.dinamani.com