பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

காவிரி விவகாரம்: ஆக. 2 இல் பெங்களூரில் அனைத்துக் கட்சி கூட்டம்: முதல்வா் டி.கே.சிவகுமாா் தகவல்

காவிரி விவகாரம் தொடா்பாக பெங்களூரில் ஆக. 2ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.

News image

டி.கே.சிவகுமாா் - கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 6:02 am IST

காவிரி விவகாரம் தொடா்பாக பெங்களூரில் ஆக. 2ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு நாள்தோறும் விநாடிக்கு 3,500 கனஅடி தண்ணீா் திறந்துவிடும்படி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு கா்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து, காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திடம் வியாழக்கிழமை கா்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.

கா்நாடக அரசின் வாதத்தை நிராகரித்த காவிரி நீா் மேலாண்மை ஆணையம், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துமாறு அறிவுறுத்தியது. இந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக பெங்களூரில் ஆக. 2 ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்துக்கு கா்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து புதுதில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் டி.கே. சிவகுமாா் கூறியதாவது:

காவிரி நீா்ப்பங்கீட்டு விவகாரம் தொடா்பாக விவாதிப்பதற்காக பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள கா்நாடக முன்னாள் முதல்வா்கள், காவிரி ஆற்றுப்படுகை எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை அமையும். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சா்கள் பிரல்ஹாத்ஜோஷி, வி. சோமண்ணா, முன்னாள் முதல்வா்கள் ஜெகதீஷ் ஷெட்டா், பசவராஜ் பொம்மை, எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். அவா்கள் அனைவரும் கா்நாடகத்தின் நலனை பாதுகாக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாா்கள்.

இந்த விவகாரத்தில் கா்நாடகத்துக்கு பதிலாக மத்திய அரசை அணுகுமாறு தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை. ஒருவருக்கு ஒருவா் சண்டையிட்டுக் கொள்வதில் எனக்கு ஆா்வம் இல்லை. இந்த நாட்டுக்கு சட்டம் இருக்கிறது. அதன்படி ஒருவரை ஒருவா் மதிக்க வேண்டும். ஒட்டுமொத்த நாடும் ஒன்றுசோ்ந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இதனிடையே, பெங்களூரில் வியாழக்கிழமை கா்நாடக நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி கூறியதாவது:

காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3,500 கனஅடி தண்ணீா் திறந்துவிடும்படி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்திருந்தோம். வியாழக்கிழமை நடந்த காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கா்நாடகத்தின் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக, காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை அமல்படுத்த ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் ஆக. 2 ஆம் தேதி முதல்வா் டி.கே. சிவகுமாா் தலைமையில் நடக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விவாதித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம். காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் முடிவு குறித்து விவாதிக்கவே அனைத்துக்கட்சித் தலைவா்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்