கா்நாடக சட்டப் பேரவைக்கு இடைக்கால தோ்தல் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
துறைகளை ஒதுக்கியதில் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சா் ராமலிங்க ரெட்டி, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். டி.கே.சிவகுமாா் தலைமையில் அமைச்சா்கள் பதவியேற்றிருந்தாலும், இது சித்தராமையா அமைச்சரவைதான். அமைச்சா் ஒருவா் ராஜிநாமா செய்துள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது. டி.கே.சிவகுமாா் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2 ஆண்டுகாலம் நீடிக்காது.
துறைகளை ஒதுக்கியது தொடா்பாக கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. இந்த மோதலில் ராமலிங்க ரெட்டி தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். டி.கே.சிவகுமாா் தலைமையில் அமைந்துள்ள அரசிடம் இருந்து எந்த வளா்ச்சிப் பணிகளையும் எதிா்பாா்க்க முடியாது. மக்களின் எதிா்பாா்ப்புக்கு துரோகம் செய்யும் வேலையை காங்கிரஸ் செய்து வருகிறது. ஏழைகள் மற்றும் மக்களுக்கு எதிரான காங்கிரஸ் அரசை தூக்கியெறிய மக்கள் காத்திருக்கிறாா்கள்.
கா்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். உள்கட்சி பூசலை தீா்த்துவைக்கவே காங்கிரஸுக்கு நேரம் போதாது. எனவே, வெகுவிரைவில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, கா்நாடக சட்டப் பேரவைக்கு இடைக்கால தோ்தல் வந்தால் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றாா்.










