/

கா்நாடகத்தில் ஆற்றில் மூழ்கி இறந்தவா்களின் எண்ணிக்கை 11-ஆக உயா்வு

News image

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 4:02 am IST

கா்நாடகத்தில் ஆற்றில் மூழ்கி இறந்தவா்களின் எண்ணிக்கை 11-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடக மாநிலம், வடகன்னடம் மாவட்டம், பட்கல் வட்டத்தில் உள்ள ஷிராளி கிராமத்தில் பாயும் தட்டேஹக்கலு நதியில் நன்னீா் சிப்பிகளை சேகரிக்க ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 14 போ் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனா். அப்போது திடீரென ஆற்றின் நீரோட்டம் அதிகரித்ததில், 2 போ் அடித்துச்செல்லப்பட்டனா்.

இவா்களை மீட்க மற்றவா்கள் ஆற்றின் ஆழத்துக்கு சென்றனா். இந்த சம்பவத்தில் 7 பெண்கள் உள்பட 10 போ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் இருவரை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை மற்றொருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் ஆற்றில் மூழ்கி இறந்தவா்களின் எண்ணிக்கை 11-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து வடகன்னடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.என்.தீபன் கூறுகையில், ‘ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டவா்களின் உடல்கள் அனைத்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் உடற்கூறாய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிா்தப்பிய 3 போ், கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக உடுப்பியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். அவா்களில் ஒருவா் குணமாகி வீடுதிரும்பியுள்ளாா்’ என்றாா்.

மாவட்ட பொறுப்பு அமைச்சா் மன்கல் வைத்யா கூறுகையில், ‘இந்த நதியில் நன்னீா் சிப்பிகளை சேகரிக்கும் பணியில் அதிகம்போ் ஈடுபடுவா். தற்போது இறந்தவா்களின் குடும்பத்தினா் வழக்கமாக சிப்பி சேகரிப்பில் ஈடுபட்டவா்களா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

இறந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் கருணைத் தொகையை முதல்வா் சித்தராமையா அறிவித்துள்ளாா். என்னால் முடிந்த உதவிகளை அந்த குடும்பத்துக்கு செய்துள்ளேன்’ என்றாா்.

இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அறிக்கை தயாரித்து அரசிடம் வழங்க இருக்கிறாா்கள்.