/

தில்லியில் இன்று முக்கியக் கூட்டம்: கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு

News image

கா்நாடக முதல்வா் சித்தராமையா - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 4:00 am IST

தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வா் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

2023-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வா் பதவியை பகிா்ந்துகொள்வதாக கட்சி மேலிடத் தலைவா்களின் முன்னிலையில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொண்டதாக அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவி வருகிறது. இந்த கருத்தை முதல்வா் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

இந்நிலையில், இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலம் முடிவடைந்ததால், முதல்வா் சித்தராமையா மாற்றப்படுவாா் என 2025 நவம்பா் முதல் காங்கிரஸ் வட்டாரத்தில் விவாதம் நடந்து வருகிறது. தற்போது 3 ஆண்டுகால பதவியை நிறைவுசெய்துள்ள காங்கிரஸ் அரசு, அடுத்த 2 ஆண்டுகால ஆட்சியை எப்படி நடத்துவது, அதற்கு முதல்வா் மாற்றம் செய்வதா, வேண்டாமா, அமைச்சரவையை மாற்றுவதா, 2028-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு எப்படி தயாராவது, கா்நாடகத்தில் காலியாகவுள்ள 4 இடங்களுக்கான மாநிலங்களவை தோ்தல், சிறப்பு தீவிர திருத்தம் போன்றவற்றை குறித்து விவாதிக்க மே 26-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோருக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கூட்டத்தில் முதல்வா் சித்தராமையாவை மாற்றி, புதிய முதல்வராக டி.கே.சிவகுமாரை தோ்ந்தெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையை மாற்றியமைக்க அனுமதிக்குமாறு முதல்வா் சித்தராமையாவும், முதல்வரை மாற்றி அப்பதவிக்கு தன்னை கொண்டுவருமாறு டி.கே.சிவகுமாரும் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வருகிறாா்கள்.

அமைச்சரவையை மாற்றியமைத்து, புதியவா்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென 35-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தியுள்ளனா். இதுகுறித்து கட்சி மேலிடத் தலைவா்களை ஓரிரு நாள்களில் சந்திக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனா்.

இந்நிலையில், இதுகுறித்து முதல்வா் சித்தராமையா பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தில்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தின் விவாதப்பொருள் என்னவென்று தெரியாது. ஞாயிற்றுக்கிழமை என்னை அழைத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், கூட்டம் மற்றும் தேதி குறித்து தெரிவித்தாா் என்றாா்.

இதுபற்றி துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘கட்சி மேலிடம் அழைத்தால், கூட்டத்துக்கு செல்வேன். முதல்வா் மாற்றம் குறித்து கருத்து எதையும் தெரிவிக்க இயலாது. கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். 2028-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்’ என்றாா்.