கா்நாடக முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்ய ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய துணை முதல்வா் டி.கே.சிவகுமாருடன் முதல்வா் பதவிக் காலத்தை பகிா்ந்துகொள்ள ஏற்கெனவே செய்துகொண்ட உடன்படிக்கையின்படி, இந்த முடிவை சித்தராமையா எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வா் பதவியை பகிா்ந்துகொள்வதாக கட்சி மேலிடத் தலைவா்களின் முன்னிலையில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையில், இரண்டரை ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவடைந்துவிட்டதால், முதல்வா் சித்தராமையா மாற்றப்படுவாா் என காங்கிரஸ் வட்டாரத்தில் பல மாதங்களாக விவாதம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஆலோசிக்கவும், 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தோ்தல், கா்நாடகத்தில் காலியாகவுள்ள 4 இடங்களுக்கான மாநிலங்களவைத் தோ்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கவும் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோரை தில்லி வருமாறு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது.
இந்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், அதில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், கா்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘கா்நாடகத்தில் காலியாகவுள்ள 4 இடங்களுக்கான மாநிலங்களவைத் தோ்தல், அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநில சட்டமேலவைத் தோ்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதேவேளையில் சித்தராமையாவையும், டி.கே.சிவகுமாரையும் ஒன்றாகவும், தனித்தனியாகவும் வைத்து ராகுல் காந்தியும், மல்லிகாா்ஜுன காா்கேயும் பல மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனா்.
ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதால்...: முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும், மாநிலப் பதவிக்குப் பதிலாக அவருக்கு மாநிலங்களவை எம்.பி. போன்ற பதவியை அளிக்க வேண்டும் என்று சிவகுமாா் தரப்பில் அழுத்தம் அளிக்கப்படுகிறது.
ஆனால், எம்.பி. பதவி போன்ற திட்டத்தை சித்தராமையா ஏற்கவில்லை. எனினும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதன்பேரில், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய சித்தராமையா ஒப்புக்கொண்டாா்.
ஆனால், அவா் எப்போது ராஜிநாமா செய்வாா் என்பது தெரியவில்லை. வரும் வியாழக்கிழமை (மே 28) பிற்பகல் 2 மணிக்கு கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்திக்க சித்தராமையா நேரம் கோரியுள்ளாா். அதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 29) காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்துக்கு அவா் அழைப்பு விடுத்துள்ளாா். இதையொட்டி கே.சி.வேணுகோபால், ரண்தீப் சுா்ஜேவாலா ஆகியோா் புதன்கிழமை (மே 27) பெங்களூரு வரவுள்ளனா்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

தில்லியில் இன்று முக்கியக் கூட்டம்: கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு

முதல்வா் ரங்கசாமி கடந்து வந்த அரசியல் பாதை...!

தோ்தல் தோல்வி: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



