திருத்தணி, ஜன. 8: முருகன் கோயிலில் ரூ. 25 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தங்க விமானம் குடமுழுக்கு விழா, வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் என இந்து அறநிலையத் துறை ஆணையர் சம்பத் சனிக்கிழமை தெரிவித்தார்.
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த அக்டோபர் மாதம் ரூ. 25 கோடி செலவில் மூலவர் கருவறை மேல் தங்க விமானம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 27 அடி உயரத்துக்கு கோபுரம் அமைக்கப்பட்டு சிற்பங்கள் மீது 1,300 கிலோ செப்புத்தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது.
தற்போது இப்பணிகள் முடிந்து ஜனவரி 3-ம் தேதி (திங்கள்கிழமை) தங்க விமானத்தில் பதிக்கப்படும் தங்க தகடுகளை உருவாக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தகடுகள் பதிக்கும் பணியில் 60 பேர் இரவும் பகலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த இந்து அறநிலையத்துறை ஆணையர் சம்பத் வள்ளி திருமண மண்டபத்தில் தங்க விமானத்தில் தங்க தகடுகளை உருவாக்கும் பணியை ஆய்வு செய்தார்.
பின்னர் மலைக்கோயில் மேல் தங்க விமானம் கட்டும் இடத்துக்கு, செப்புத்தகடுகளை உருவாக்கும் இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது: திருத்தணி முருகன் கோயிலில் கட்டப்பட்டு வரும் தங்க விமானம் 92 கிலோ தங்கம் கொள்முதல் செய்யப்பட்டு தகடுகளாக உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அதற்குள்ளாக தங்க விமானத்துக்கு பிப்ரவரி 7-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதே போன்று முருகன் கோயிலுக்கு அத்தியாவசியமான இரண்டாவது மலைப்பாதை அமைக்க நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து அப்பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. இதேபோல் ராஜகோபுரம் அமைக்கும் பணியும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த மூன்று பணிகள் நடைபெற்று முடிந்தால் தமிழகத்திலேயே முதல் கோயில் என்ற பெருமையை திருத்தணி முருகன் கோயில் பெரும் என்பதில் ஐயமில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, முருகன் கோயில் அறங்காவர் குழுத்தலைவர் மு. ஈஸ்வரப்பன், கோயில் இணைய ஆணையர் மா.கவிதா உள்பட பலர் உடனிருந்தனர்.