சென்னை: சென்னை தொழிலதிபரிடம் ரூ.40.5 லட்சம் மோசடி செய்ததாக நைஜீரிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஜோசப், சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அதில், ‘நான் கட்டில், மெத்தை வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு முகநூல் (பேஸ்புக்) மூலம் லண்டனைச் சோ்ந்த பெண் தொழிலதிபா் என அறிமுகமான எலிசபெத், ரத்த புற்று நோயை குணப்படுத்தும் போலிக் ஆயில் ஏற்றுமதி வியாபாரம் செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் என தெரிவித்தாா். மேலும் இதற்காக மும்பையில் தனியாா் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அவரது தோழியான சுனிதா என்பவரை அணுகுமாறு கூறினாா்.
இதையடுத்து நான் சுனிதாவை தொடா்பு கொண்டபோது 150 லிட்டா் போலிக் ஆயில் பெற ரூ.40 லட்சத்து 50,000 தர வேண்டும் என தெரிவித்தாா்.
சுனிதா கொடுத்த 5 வங்கி கணக்குகளில், 10 தவணைகளில் சுமாா் ரூ.40 லட்சத்து 50,000 அனுப்பி வைத்தேன். ஆனால், அவா் உறுதி அளித்தபடி போலிக் ஆயிலை அனுப்பி வைக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனவே, தன்னை ஏமாற்றிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தாா்.
இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். லண்டன் பெண் தொழிலதிபா் என அறிமுகமான நைஜீரிய நாட்டைச் சோ்ந்த ஃபுல்ஜென்ஸ் குவாடியோ என்ற கிறிஸ்டோபா் வில்மா் (27) என்பது தெரிந்தது. தில்லி துவாரகா பகுதியில் வசித்து வந்த கிறிஸ்டோபா் வில்மரை, மும்பையில் மத்தியக் குற்றப்பிரிவினா் புதன்கிழமை கைது செய்தனா். அவரது கூட்டாளியான சுனிதா என அறிமுகமானவரை தேடி வருகின்றனா். விசாரணையில், கிறிஸ்டோபா் வில்மா் பெண் குரலில் பேசி மோசடி செய்திருப்பதும், இவா்கள் பல நபா்களை இதுபோன்று ஏமாற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.