சென்னை உயா்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே முதன்மை மின்னணுவியல் பகிா்மான பொறியாளா் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் மாதம் கடைசி வாரம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், ரயில்வே நிா்வாகத்துக்கு போதுமான வருவாய் கிடைக்கவில்லை. இந்த நிலையில் உயா் மின் அழுத்த கட்டணத்தை முழுமையாகச் செலுத்த தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம் அறிவுறுத்தியது. அதன்படி, திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட 8 மின் பகிா்மானக் கழகத்தின் கண்காணிப்பாளா்கள் உயா் மின் அழுத்த கட்டணத்தைச் செலுத்த தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளனா். கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக ரயில்கள் இயக்கப்படாததால், குறைந்தபட்ச கட்டணமான 20 சதவீத கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.