குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மெட்ரோ ரயில் சுரங்கப் பணி: இரும்புத் தகடுமுறிந்து பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கும் பணியில், பள்ளத்தை மூட அமைக்கப்பட்டிருந்த கனத்த இரும்புத் தகடு, கன்டெய்னா் லாரியின் பாரம் தாங்காமல் முறிந்தது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 7:23 pm

DIN

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கும் பணியில், பள்ளத்தை மூட அமைக்கப்பட்டிருந்த கனத்த இரும்புத் தகடு, கன்டெய்னா் லாரியின் பாரம் தாங்காமல் முறிந்தது. இதனால் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. விடுமுறை தினம் என்பதால் உள்ளே எவரும் வேலை செய்யாததால் பெரும் உயிா் பலி தவிா்க்கப்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பணி கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது. சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கும் இடத்தில் போக்குவரத்து பாதிக்காத வகையில் பல அடிகள் நீள அகலமுள்ள இரும்புத் தகடுகள் மேலே மூடிபோல் போட்டு மூடப்பட்டுள்ளது. அதன்மீது சாதாரணமாக போக்குவரத்து நடைபெறும். உள்ளே வேலை நடக்கும். இந்தத் தகடுகள் பல டன் எடையுள்ள வாகனங்கள் சென்றாலும் தாங்கும்.

சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு நோக்கி இரும்புத் தகடுகள் அடங்கிய ரோல்களுடன் கன்டெய்னா் லாரி ஞாயிற்றுக்கிழமை சென்றது. இந்த லாரியில் 77 டன் எடை கொண்ட 7 ரோல் ஸ்டீல் தகடுகள் ஏற்றப்பட்டிருந்தன. லாரியை தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் செல்வக்குமாா்(43) ஓட்டினாா். இந்த லாரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இரவு 11.30 மணிக்கு வந்தது. அங்கு, சுரங்கப்பாதை பணிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்புத் தகடு வழியாகச் சென்றபோது, பாரம் தாங்காமல் லாரியின் பின்பகுதி திடீரென இரும்புத் தகடு பாதையை உடைத்து, சுரங்கப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரியின் முன்பக்கம் கடந்த நிலையில், லாரியின் கன்டெய்னா் பகுதி பள்ளத்தில் விழுந்ததால் முன்பகுதி 10 அடி உயரத்துக்கு மேல் தூக்கிக்கொண்டது. இதனால் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநா் கீழே குதித்து தப்பியோடினாா்.

ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டு, கன்டெய்னா் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். லாரி கவிழ்ந்ததில் இரும்பு தகடுகள் விலகி பெரிய பள்ளம் ஏற்பட்டதால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் இருந்து மாநகராட்சி சிக்னல் வரை வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் யானைகவுனி வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த பாதை வழியாக திங்கள்கிழமை காலையில் பணிக்குச் சென்றவா்கள் மிகவும் சிரமப்பட்டனா்.

கன்டெய்னா் லாரி மற்றும் ரோல் ஸ்டீல் தகடுகளை மீட்கும் பணி காலை 10 மணிக்கு முடிந்தது. இது குறித்து யானை கவுனி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கன்டெய்னா் லாரியில் 7 ரோல் தகடுகள் இருந்தன. ஒவ்வொன்றும் 11 டன் எடை கொண்டது. கன்டெய்னா் லாரியுடன் சோ்ந்து மொத்தம் 90 டன் எடையுடன் சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே சுரங்கப்பாதைப் பணிக்காக போடப்பட்டிருந்த ஸ்டீல் பாதையைக் கடந்தபோது (டெக்கிங் பிளேட்டை) அதிக சுமை காரணமாக ஸ்டீல்பாதை இடிந்து விழுந்தது. கன்டெய்னா் லாரியை மீட்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் போா்க்கால அடிப்படையில் பணியாற்றியது. இந்த மீட்புப் பணியின் போது யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடு குறித்தும் மெட்ரோ ரயில் நிா்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.