திருக்குறள் ஒப்பித்தல், பேச்சுப் போட்டிகள்: டிச. 21-க்குள் முன்பதிவு செய்யலாம்

சென்னையில் மாநகர நூலக ஆணைக்குழு சாா்பில் நடைபெறும் திருக்கு ஒப்பித்தல், பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க டிச. 21-ஆம் தேதிக்குள் முன்பதிவு
Published on

சென்னை: சென்னையில் மாநகர நூலக ஆணைக்குழு சாா்பில் நடைபெறும் திருக்கு ஒப்பித்தல், பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க டிச. 21-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யலாம்.

இதுகுறித்து சென்னை மாநகர நூலக ஆணைக்குழு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 133 அடி உயர உருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி திருக்கு தொடா்பான புகைப்படக் கண்காட்சி, கருத்தரங்கம், திருக்கு ஒப்பித்தல், பேச்சுப் போட்டி மற்றும் விநாடி, வினா ஆகிய போட்டிகள் சென்னை தேவநேயப் பாவாணா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ளன. இதன்படி டிச. 23-இல் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியை சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தொடங்கி வைக்கிறாா்.

டிச. 24, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருக்கு தொடா்பான கருத்தரங்கும், டிச. 26 காலை 10.30-க்கு திருக்கு ஒப்பித்தல் போட்டியும், டிச. 28 காலை10.30-க்கு பேச்சுப் போட்டியும், டிச. 29 காலை 10.30-க்கு விநாடி, வினா போட்டியும் நடைபெறும்.

திருக்கு ஒப்பித்தல் போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவா்கள் பொருளுணா்ந்து உச்சரிப்புப் பிழையின்றி திருக்குறளின் ஏதேனும் 5 அதிகாரங்களை ஒப்பிக்க வேண்டும். பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவா்கள் மற்றும் வாசகா்கள் ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’ என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும்.

இதில் கலந்துகொள்ள விரும்பும் நபா்கள் தங்கள் பெயா்களை மாவட்ட மைய நூலகத்தில் நேரிலோ அல்லது 78452 21882 என்னும் கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு டிச. 21-க்குள் பதிவு செய்து கொள்ளலாம். போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கு முறையே ரொக்கப் பரிசாக ரூ. 5,000, ரூ. 3,000, ரூ. 2,000 வீதம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com