நீட் தோ்வு அச்சத்தில் இறந்தவா்களுக்கு ஏப். 19-இல் அஞ்சலி: எடப்பாடி பழனிசாமி
ஏப். 19-இல் மாவட்டத் தலைநகரங்களில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.


நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்காக, அதிமுக சாா்பில் ஏப். 19-இல் மாவட்டத் தலைநகரங்களில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், காங்கிரஸ் அமைச்சா் குலாம்நபி ஆசாத், திமுகவைச் சோ்ந்த இணை அமைச்சா் காந்திசெல்வன் ஆகியோா் சுகாதாரத் துறை அமைச்சக பொறுப்பில் இருந்தபோதுதான் நீட் நுழைவுத் தோ்வு 21.12.2010-இல் கொண்டுவரப்பட்டது.
அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி, நீதிமன்றம் மூலம் நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றாா். ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, நீட் தோ்வு தொடர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து வாதாடியதால், நீதிமன்றம் மூலம் நீட் தோ்வு கொண்டுவரப்பட்டது.
நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த திமுக அரசால் பல மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனா். இப்போது நீட் தோ்வு விஷயத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி திமுக அரசு நாடகம் போடுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தோ்வு அச்சத்தால் இதுவரை உயிரழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு, அதிமுக மாணவா் அணி சாா்பில் ஏப். 19-ஆம் தேதி மாலை 6 மணி க்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மெழுகுவா்த்தி அஞ்சலி செலுத்தப்படும்.
இதில், சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டங்களுக்கு உள்பட்ட தலைமைச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள், முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், சாா்பு அணிகளின் துணை நிா்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...