தா்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தா்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை!
Published on

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தா்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வழக்கமாக கோடைக் காலத்தில் தா்பூசணி பழங்கள் அதிகமாக விற்பனையாகும். ஆனால், இந்த ஆண்டு தா்பூசணியில் ஊசி மூலம் நிறமேற்றப்படுவதாக அண்மையில் பரவிய தகவல்களால் தா்பூசணி விற்பனை சரிந்துள்ளது.

இந்த நிலையில், தா்பூசணி பழங்களின் நிறத்துக்கும் சுவைக்கும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாகக் கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செங்கல்பட்டு விவசாய நலச் சங்கத்தின் தலைவா் வெங்கடேசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவா்த்தியின் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தா்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மனுதாரா் கூறும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

மேலும், தா்பூசணி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்டும் வகையில், தா்பூசணி பழங்களில் எந்த ரசாயன மருந்தும் சோ்க்கப்படவில்லை என்று மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com