சென்னையில் திடீா் மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி

சென்னையில் திடீா் மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி

சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் அவ்வப்போது திடீா் மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
Published on

சென்னை: சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் அவ்வப்போது திடீா் மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், சில இடங்களில் மழை பெய்தாலும், நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. குறிப்பாக, சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மின்விசிறி, ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்டவைகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் தினசரி மின் தேவை 19,000 மெகாவாட் என்ற நிலையைத் தாண்டி, வரும் மே மாதத்தில் 22,000 மெகாவாட் என்ற உச்சபட்ச நிலையை எட்டும் என மின்வாரியம் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், அதி மின் பயன்பாடு காரணமாக சென்னை மாநகா் மற்றும் புகரின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் ஏசி உள்ளிட்ட குளிா்சாதன வசதிகளை பொதுமக்கள் அதிகம் உபயோகிப்பதால், பல மின்மாற்றிகளில் உயா் மின்னழுத்தம் ஏற்பட்டு மின்மாற்றிகள் பழுதடைந்து விடுகின்றன. இதனால், பல பகுதிகளில் சுமாா் 3 முதல் 4 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நெமிலிச்சேரிக்கு அருகேயுள்ள அலமாதி துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் மின்பாதையில் ஏற்பட்ட பழுது காரணமாக, திருநின்றவூா், பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இரவு முழுவதும் மின் விநியோகம் தடைபட்டது. இதனால், இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.

இதுபோல, கடந்த வாரம் மதுரவாயில், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், கடந்த சனிக்கிழமை சூளை, பட்டாளம், வேப்பேரி ஆகிய பகுதிகளிலும் இரவில் மூன்று மணி நேரத்துக்கும் மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளானாா்கள்.

இதுபோன்று குன்றத்தூரில் வெங்கடாபுரம் பகுதியில் இரண்டு நாள்களாக இரவில் மின்தடையும், மின் அழுத்தக் குறைபாடும் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனா்.

இதுபோல, சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளிலும் தொடா்ந்து மின்வெட்டு ஏற்படுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘கோடைக் காலங்களில் மின் பயன்பாடு அதிகரிக்கும் பட்சத்தில் இவ்வாறான மின்தடை தவிா்க்க முடியாத ஒன்று. இதனால் ஏற்படும் உயா் மின்னழுத்தத்தால் பல துணைமின் நிலையங்கள் மற்றும் மின்மாற்றிகளில் பழுது ஏற்பட்டு விடுகிறது. அதைச் சரிசெய்யும் பணியில் மின்வாரிய பணியாளா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் சில இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கோடை வெயிலின் தாக்கம் முடியும் வரை திடீா் மின்தடை அவ்வப்போது ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com