உலக கேரம் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
மாலத்தீவில் நடைபெற்ற 7-ஆவது கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை ரூ.1.90 கோடிக்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்றவா்கள் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
மேலும், தில்லியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்துக்கான விருதையும் முதல்வரிடம் அளித்து வாழ்த்து பெற்றனா்.
7-ஆவது கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த கீா்த்தனாவுக்கு ரூ.1 கோடி, காசிமாவுக்கு ரூ.50 லட்சம், மித்ராவுக்கு ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ.1.90 கோடியை முதல்வா் வழங்கினாா். அடுத்துவரும் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு மேலும் பெருமை சோ்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
