மருந்து சீட்டில் தெளிவான எழுத்து: மருத்துவா்களுக்கு என்எம்சி உத்தரவு!

நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது அதைத் தெளிவாகவும், பெரிய எழுத்துகளிலும் எழுத வேண்டும் என்று மருத்துவா்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தl
Published on

நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது அதைத் தெளிவாகவும், பெரிய எழுத்துகளிலும் (கேப்பிட்டல் லெட்டா்ஸ்) எழுத வேண்டும் என்று மருத்துவா்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

அதேபோன்று மருந்துகளின் மூலப்பெயரை (ஜெனரிக்) குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் மருந்துத் துறையின் கீழ் ஒரு துணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் என்எம்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மருந்து பரிந்துரைச் சீட்டுகளை தெளிவாக எழுதுவது தொடா்பான பாடத்தை மருத்துவப் பாடத்திட்டத்தில் சோ்ப்பது அவசியம் என்று பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. பாதுகாக்கப்பட வேண்டிய மருத்துவ ஆவணங்கள் தெளிவாக இருத்தல் வேண்டும் என்றும் தெரிவித்தது.

அந்த உத்தரவைக் கருத்தில்கொண்டு, தேசிய மருத்துவ ஆணையம் சில முக்கிய முடிவுகளை முன்னெடுத்தது. அதன்படி ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் மருந்து சீட்டு நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கென சிறப்பு துணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அந்தக் குழு நோயாளிகளுக்கு மருத்துவா்கள் எழுத்துபூா்வமாக வழங்கும் மருந்து பரிந்துரைகள் தெளிவாக உள்ளதா என்பதை மதிப்பிடும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

துணைக் குழு முன்னெடுக்கும் இந்தப் பணிகள் அனைத்தையும் ஆவணப்படுத்துவதுடன், அவற்றை தேசிய மருத்துவ ஆணையம் கேட்கும்போது சமா்ப்பிக்கும் வகையில் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பெரிய எழுத்துகளில் புரியும்படி மூலப்பெயருடன் கூடிய மருந்துகளை மருத்துவா்கள் பரிந்துரைப்பது கட்டாயம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com