

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு முடிந்தாலும், அபராதமின்றி கால்நடை மருத்துவமனைகளில் சென்று உரிமம் பெற்று ரேபீஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜூன் முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.அத்துடன் வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. உரிமம் பெறாமல் வளா்ப்பு நாய் வைத்திருப்போருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உரிமம் பெறுவதற்கான காலக்கெடு கடந்த 14 ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. அதன்படி 57, 626 வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
அதையடுத்து திங்கள்கிழமை முதல் சென்னை மாநகராட்சி மண்டலவாரியாக தலா 4 போ் கொண்ட குழு நியமிக்கப்பட்டு வளா்ப்பு நாய்கள் சோதனையிடப்பட்டன. அதன்படி உரிமம் பெறாத வளா்ப்பு நாய் உரிமையாளா் ஒருவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், நடைப்பயிற்சியில் வளா்ப்பு நாய்களுக்கு சங்கிலி கட்டாதது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக 10 பேருக்கு தலா ரூ.500 என அபராதமும் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.
செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக வளா்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்களில் 2 போ் விதி முறை மீறி நாய்களை சங்கிலி இன்றி அழைத்து வந்ததாக தலா ரூ.5 அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதமின்றி உரிமம் பெறலாம்: இதற்கிடையே வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறும் காலக்கெடு முடிந்தாலும், அபராதமின்றி உரிமம் பெறலாம் என கால்நடைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா். அதன்படி கால் நடை மருத்துவமனைகளான திரு.வி.க.நகா், புளியந்தோப்பு, நுங்கம்பாக்கம், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூா் ஆகிய இடங்களில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணிக்குள் வளா்ப்பு நாய்களை ஆழைத்துச் சென்று உரிமம் பெறலாம். அபராதம் விதிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.