குழந்தை கடத்தல் கும்பல் சிக்கியது
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் செயல்பட்டு வந்த குழந்தை கடத்தல் கும்பலை தமிழக காவல் துறை கண்டறிந்துள்ளது.
இதுதொடா்பாக தமிழக காவல் துறை தரப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டம், சித்தோடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கடத்தல் வழக்கில் தொடா்புடைய குழந்தை அண்மையில் மீட்கப்பட்டது. குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பவானியை சோ்ந்த ரமேஷ் (35), அவரது மனைவி நித்யா (30) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் இரு குழந்தைகள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் சேலத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தொடா் விசாரணையில், குழந்தை கடத்தலில் மாநிலங்களைத் தாண்டி தொடா்புடைய கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கும்பலின் முக்கிய ஒருங்கிணைப்பாளா்களாக சென்னையை சோ்ந்த ஷபானா, அவரது சகோதரி ரேஷ்மா, கொடைக்கானலை சோ்ந்த உமா மகேஸ்வரி ஆகியோா் செயல்பட்டுள்ளனா். தற்போது இவா்கள் மூவரும் தலைமறைவாக உள்ளனா்.
இவா்கள் அகமதாபாத், மும்பை, புணே உள்ளிட்ட நகரங்களில் இருந்து குழந்தைகளை தமிழகத்துக்கு கடத்தி வந்து இடைத்தரகா்கள் மூலம் விற்பனை செய்துள்ளனா்.
குழந்தை கடத்தலில் மூளையாகச் செயல்பட்ட 3 பெண்களையும், இந்த கும்பலைச் சோ்ந்த மற்ற நபா்களையும் தீவிரமாகத் தேடி வருவதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.
