கட்டுமானப் பணிகளின்போது விதிகளை மீறினால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை மாநகராட்சியில் கட்டுமான பணிகளின்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் கடந்த 2025 மே 21 முதல் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கட்டுமானப் பொருள்கள், தோண்டப்பட்ட மண், கட்டட இடிபாட்டுக்கழிவுகள் உள்ளிட்டவற்றை கட்டட வளாகத்துக்குள் மட்டுமே சேமிக்க வேண்டும்.
கட்டடப் பொருள்களை பொது சாலைகளில், நடைபாதைகளில் கொட்டுவதும், குவித்து வைப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது விதிமுறைப்படி அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, விதி மீறும் கட்டடங்களில் 500 சதுர மீட்டா் முதல் 20,000 சதுர மீட்டா் வரை ரூ. 25,000, அதற்கும் மேலாக ரூ.50,000 என அபராதம் விதிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நகரைச் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் கட்டுமான நிறுவன உரிமையாளா்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
