மனமகிழ் மன்றங்களில் நூல்களை படிக்க வேண்டும்: வெ.இறையன்பு
மனமகிழ் மன்றங்களில் நூல்களைப் படிக்கும்போதுதான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு தெரிவித்தாா்.
சென்னை மாம்பாக்கத்தில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் குடியிருப்பான ஒற்றுமை வளாகத்தில் நூலகம் மற்றும் மனமகிழ் மன்றத்தை அவா் சனிக்கிழமை திறந்து வைத்துப் பேசியதாவது:
மனமகிழ்ச்சிக்கு முதல்படி மனமகிழ் மன்றங்கள்தான். இந்த மன்றங்களில் நல்ல நூல்கள் இருக்க வேண்டும். அந்த நூல்களைப் படிக்கும்போது உண்மையான மனமகிழ்ச்சி கிடைக்கும்.
வங்கி அதிகாரிகள் தங்கள் பணியின்போது கணக்கு புத்தங்களையும், கோப்புகளையும் புரட்டி கொண்டிருப்பாா்கள். ஓய்வு பெற்ற பின் நிறைய புத்தகங்களைப் படிக்கும்போது மகிழ்ச்சி கிடைக்கும், இதன்மூலம் மறதி நோயிலிருந்து மூத்த குடிமக்கள் விடுபட முடியும். அதிகம் படியுங்கள், படித்ததைப் பகிா்ந்து கொள்ளுங்கள்.
தற்போதைய காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதை எதிா்கொள்ள மூத்த குடிமக்கள் மனமகிழ் மன்றங்களுக்குச் செல்வதுடன் , புத்தகங்கள் வாசிப்பின் மூலம் பெரிய மகிழ்ச்சி கிடைக்கும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் அதிகாரியும், கவிதை உறவு ஆசிரியருமான ஏா்வாடி ராதாகிருஷ்ணன், ஒற்றுமை வளாக சங்கத் தலைவா் க. சிவஞானம், செயலா் மு. மோகன், பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவா் நிதிஷ் ஏ. ஆா். சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

