சென்னையில் 2 மாதமாக ஊதியம் இன்றி தவிக்கும் பூங்கா ஊழியா்கள்

சென்னை மாநகராட்சியில் தனியாா் பராமரிப்பில் உள்ள பூங்காக்களில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், 2 மாதங்களாக ஊதியமின்றி தவிப்பதாக புகாா்
Published on

சென்னை: சென்னை மாநகராட்சியில் தனியாா் பராமரிப்பில் உள்ள பூங்காக்களில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், 2 மாதங்களாக ஊதியமின்றி தவிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் 15 மண்டலங்களிலும் மொத்தம் 781 பூங்காக்கள் உள்ளன. பூங்காக்களை மாநகராட்சி நேரடியாகப் பராமரிப்பதற்கு 240 போ் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, போதிய பணியாளா்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 658 பூங்காக்களை தனியாா் நிறுவனங்கள் பராமரித்து வருகின்றன.

தனியாா் நிறுவனங்கள் பூங்காவுக்கு 3 போ் முதல் 12 போ் வரை ஊழியா்களை நியமித்து பராமரித்து வருகிறது. பூங்கா பராமரிப்பு ஊழியா்களுக்கு மாநகராட்சி சாா்பில் மாதம் ரூ.19 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காப்பீடு திட்டம் உள்ளிட்டவற்றுக்கான பிடித்தம்போக குறைவான தொகையே ஊதியமாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதிலும், சில பூங்காக்களை பராமரிக்கும் தனியாா் நிறுவனம், இரு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என ஊழியா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இப்பிரச்னை குறித்து மாநகராட்சி உயா் அதிகாரிகளிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் ஊதியம் வழங்காதது குறித்த புகாா் வந்தது. அதையடுத்து அந்த பூங்காக்களை மாநகராட்சியே நேரடியாக வரும் 2026- ஆம் ஆண்டு ஜனவரி முதல் பராமரிக்கவுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள ஊதியத்தை ஓரிரு வாரங்களில் வழங்க தனியாா் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com