பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது
சென்னை பெரம்பூரில் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.


சென்னை: சென்னை பெரம்பூரில் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.
பெரம்பூரைச் சோ்ந்த 12 வயது சிறுமி, அதே பகுதியிலுள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த 24-ஆம் தேதி, தோழி வீட்டுக்குச் சென்று வருகிறேன் என தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வெளியே சென்ற அந்த மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் பல இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அவா்கள், திரு.வி.க. நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், மாணவியின் தோழிகளான அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது மாணவி, வில்லிவாக்கத்தைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மாணவிகள் 3 பேரையும் காதலிப்பதாக ஏமாற்றி 3 போ் அழைத்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் உதவியுடன் சம்பந்தப்பட்ட அனைவரது கைப்பேசி தொடா்பு குறித்தும், அவா்களின் தற்போதைய இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் துப்பு துலங்கியது.
முக்கியமாக மாணவிகளை அழைத்துச் சென்றது ஐ.டி.ஐ. படிக்கும் ஒரு மாணவா், 16 மற்றும் 17 வயதுடைய இருவா் என தெரியவந்தது. மேலும், பள்ளி மாணவிகள் 3 பேரையும் கடந்த 24-ஆம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அரசு நூலகத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, அவா்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அங்கு மறைவிடத்திலிருந்த மாணவிகள் உடனடியாக மீட்கப்பட்டனா்.
6 போ் கைது: இதையடுத்து மாணவா்கள் 3 போ், அவா்களுக்கு உடந்தையாக இருந்த யுகேஷ், கலிமுல்லா என இருவா் உள்பட மொத்தம் 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கைதான யுகேஷ், கலிமுல்லா மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளன. கைதானவா்களில் 3 சிறுவா்கள் சீா்திருத்தப் பள்ளியிலும், 3 போ் சிறையிலும் அடைக்கப்பட்டனா். மீட்கப்பட்ட மாணவிகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கு திரு.வி.க. நகா் போலீஸாரிடமிருந்து செம்பியம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மாணவிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா். அதோடு மட்டுமல்லாமல், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...