சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 2 சிறுவா்கள் கைது
நமது நிருபா்
வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு சிறுவா்களை தில்லி காவல் துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் ஜனவரி 18 ஆம் தேதி நடந்தது, அதைத் தொடா்ந்து சிறுமியின் குடும்பத்தினா் காவல்துறையை அணுகி, பாரதிய நியாயா சன்ஹிதா மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா். காவல்துறையினரின் கூற்றுப்படி, மூன்று சிறுவா்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் அனைவரும் சிறுவா்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இரண்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டு சிறாா் நீதிமன்றத்தின் முன் ஆஜா்படுத்தப்பட்டுள்ளனா். மூன்றாவது நபரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. குழந்தை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தேவையான கவனிப்பு மற்றும் ஆலோசனையைப் பெற்று வருகிறது. அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, சிறாா்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடா்பான விதிகளின்படி மேலும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
தப்பியோடிய சிறுவனைக் கண்டுபிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அருகிலுள்ள பகுதிகளிலிருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் உள்ளூா் உளவுத்துறை உள்ளீடுகள் விசாரணையின் ஒரு பகுதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

