உயா்நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளைக் குறைக்க தற்காலிக நீதிபதிகளை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி
உயா்நீதிமன்றங்களில் 18 லட்சத்துக்கும் அதிகமான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அந்தந்த நீதிமன்றங்களின் அனுமதிக்கப்பட்ட பலத்தில் 10 சதவீதத்துக்கு மிகாமல் தற்காலிக நீதிபதிகளை நியமித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதியளித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய சிறப்புஅமா்வு, உயா்நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகள் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2021, ஏப்ரலில் வழங்கிய தீா்ப்பில் விதித்திருந்த சில நிபந்தனைகளைத் தளா்த்தியும் மாற்றியும் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே வழங்கிய முந்தைய தீா்ப்பில், ‘ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகளை 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தற்காலிக நீதிபதிகளாக நியமிக்கலாம். தற்காலிக நீதிபதிகள் வழக்குகளை தனி அமா்வில் விசாரிக்கலாம். ஆனால், ஒரு உயா்நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட பலத்தில் 80 சதவீத நீதிபதிகள் பணியில் இருந்தால் தற்காலிக நீதிபதிகளை நியமிக்க முடியாது’ என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீா்ப்பில், ‘அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையில் காலியிடங்கள் 20 சதவீத்துத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நிபந்தனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
ஒவ்வொரு உயா்நீதிமன்றமும் 2 முதல் 5 தற்காலிக நீதிபதிகளை நியமிக்கலாம். அதேநேரம், இந்த எண்ணிக்கை மொத்த அனுமதிக்கப்பட்ட பலத்தில் 10 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தற்காலிக நீதிபதிகள் தனி அமா்வில் வழக்கை விசாரிக்காமல், உயா்நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி தலைமையிலான அமா்வில் மட்டுமே இடம்பெறுவா். தேவைப்பட்டால், இந்த விவகாரத்தில் கூடுதல் வழிகாட்டுதல்களை வழங்க உச்சநீதிமன்றம் மீண்டும் கூடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகளின்படி, நாட்டின் உயா்நீதிமன்றங்களில் 18 லட்சத்துக்கும் மேல் குற்றவியல் வழக்குகள் உள்பட மொத்தம் 62 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தற்காலிக நீதிபதிகள் நியமனம் குறித்து ஏற்கெனவே உள்ள தீா்ப்பில் சில மாற்றங்களைச் செய்ய இருப்பதாக உச்சநீதிமன்றம் கடந்த ஜன. 21-ஆம் தேதி நடைபெற்ற அமா்வில் தெரிவித்திருந்தது. தீா்ப்புக்கு முன்னதாக, அமா்வின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்பதாக அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி தெரிவித்தாா்.