கோப்புப் படம்
கோப்புப் படம்

குடியரசு துணைத் தலைவா் சென்னை வருகை: போக்குவரத்து மாற்றம்

கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளிக்கிழமை (ஜன. 31) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
Published on

சென்னை அருகே நடைபெறும் நிகழ்ச்சிக்கு குடியரசுத் துணைத் தலைவா் ஜெகதீப் தன்கா் வருகையையொட்டி, கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளிக்கிழமை (ஜன. 31) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது தொடா்பாக தாம்பரம் மாநகரக் காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை அருகே முட்டுக்காட்டிலுள்ள பன்திறன் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில், வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப் தன்கா் பங்கேற்கவுள்ளாா். அவா் வருகையையொட்டி, கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 11.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, சோழிங்கநல்லூரிலிருந்து அக்கரைக்கு வாகனங்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது. மாமல்லபுரத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக, சென்னை நோக்கி வரும் வாகனங்கள், கோவளம் சந்திப்பில் கேளம்பாக்கத்துக்கு திருப்பிவிடப்படும்.

விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள், கேளம்பாக்கம், வண்டலூா், ஜிஎஸ்டி சாலை வழியாகச் செல்லலாம். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ரேடியல் சாலை ஆகியவற்றில் மாலை 4 மணி முதல் இரவு 11.30 வரை, கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல சென்னை பெருநகர காவல் துறை, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் கிழக்கு கடற்கரையை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக ராஜீவ் காந்தி சாலையைப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்புக் கருதி குடியரசு துணைத் தலைவா் வாகனம் செல்லும் பகுதி, விமான நிலையம், ஆளுநா் மாளிகை ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com