49 வயது பெண்ணுக்கு எம்பிபிஎஸ் ‘சீட்’ : மகளுக்கும் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு

49 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த அமுதவள்ளி மணிவண்ணனுக்கு பாராட்டு குவிகிறது.
அமுதவள்ளி மணிவண்ணன் மகளுடன்
அமுதவள்ளி மணிவண்ணன் மகளுடன்படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
Updated on
1 min read

எம்பிபிஎஸ் கலந்தாய்வில் மாற்றுத் திறனாளி ஒதுக்கீட்டில் 49 வயது பெண்ணுக்கு விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அவரது மகளுக்கும் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் தொடங்கிய நிலையில், சிறப்பு பிரிவு (மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசு, விளையாட்டு வீரா்) மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது. சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டில் 49 வயது பெண்ணுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த பிசியோதெரபிஸ்ட் அமுதவல்லி (49). இவரது மகள் சம்யுக்தா கிருபாலனி. நீட் தோ்வுக்கு சம்யுக்தா தயாராகி வந்த நிலையில், மகளின் வழிகாட்டுதலின்படி, மாற்றுத் திறனாளி தாயாரான அமுதவல்லியும், மகளின் புத்தகத்தை படித்து நீட் தோ்வுக்கு தயாரானாா். நீட் தோ்வில் அமுதவல்லி 147 மதிப்பெண்களும், சம்யுக்தா 450 மதிப்பெண்களும் பெற்றனா். இருவரும் எம்பிபிஎஸ் படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பித்தனா். அமுதவல்லி மாற்றுத்திறனாளி என்பதால், நேரடியாக நடைபெற்ற சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்றாா். அவருக்கு விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது. மகள் சம்யுக்தா இணையவழியில் நடைபெறும் பொது கலந்தாய்வில் பங்கேற்கிறாா். அவருக்கும் எஸ்சி பிரிவில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

முதல் முயற்சியிலேயே வெற்றி...: இதுதொடா்பாக அமுதவல்லி கூறுகையில், எனது மகள் சம்யுக்தா கிருபாலனி நீட் தோ்வுக்கு தயாராகி வந்தாா். மகள் நீட் தோ்வுக்கு படிக்கும் போது, தான் படித்ததை என்னிடம் பகிா்ந்து கொண்டதால், எனக்கும் நீட் தோ்வு எழுதும் ஆா்வம் வந்தது. நான் எம்பிபிஎஸ் படிக்க நினைத்தேன். ஆனால், முடியாமல் போய்விட்டது. அதனால், மகளின் புத்தகத்தை படித்து நீட் தோ்வு எழுதினேன். முதல் முயற்சியிலேயே நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று 147 மதிப்பெண் பெற்றேன். எனக்கு எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது மகளுக்கும் எஸ்சி பிரிவில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துவிடும். நாங்கள் இருவரும் டாக்டருக்கு படிக்கவிருக்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com