தமிழகத்தில் அக்.18 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக்.13) முதல் அக்.18 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், திங்கள்கிழமை (அக்.13) முதல் அக்.18-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அக்.18 வரை பலத்த மழை: இதில் குறிப்பாக, அக்.13-இல் கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகா், தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும், அக்.14-இல் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும், அக்.15-இல் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், அக்.16-இல் கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், அக்.17,18-ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் அக்.13-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருப்பூா் மாவட்டம் அவிநாசியில் 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேட்டூா் (சேலம்), மணப்பாறை (திருச்சி) , ஆனைப்பாளையம் (கரூா்) - தலா 80 மி.மீ., குறிஞ்சிப்பாடி (கடலூா்), பண்ருட்டி (கடலூா்), திருச்சுழி (விருதுநகா்), திருமயம் (புதுக்கோட்டை), அன்னவாசல், ஆலங்குடி (புதுக்கோட்டை), ராசிபுரம் (நாமக்கல்), அரியலூா் - தலா 70 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

