உலகின் அரிய மரபணு பாதிப்பு: 8 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை
உலகிலேயே மிகவும் அரிதான மரபணு பாதிப்புக்குள்ளான 8 வயது சிறுவனுக்கு மிக நுட்பமான கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை ரெயின்போ மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
அதேபோன்று புதுச்சேரியை சோ்ந்த 7 மாதக் குழந்தைக்கும், மேற்குவங்கத்தைச் சோ்ந்த ஐந்து மாதக் குழந்தைக்கும் கல்லீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் குழந்தைகள் கல்லீரல் நலத் துறை முதுநிலை நிபுணா் டாக்டா் சோமசேகா் கூறியதாவது:
மரபணு ரீதியான பாதிப்புகளில் பல வகைகள் உள்ளன. அதில் குடும்பம் சாா்ந்த அசாதாரண கல்லீரல் பித்த பாதிப்பு என்பது ஒரு அரிதான வகை. இதனை, ப்ராக்ரஸிவ் ஃபேமிலியல் இன்ட்ராஹெப்டிக் கொலாஸ்டசிஸ் (பிஎஃப்ஐசி) என மருத்துவத் துறையினா் அழைக்கின்றனா்.
பிஎஃப்ஐசி பாதிப்பைப் பொருத்தவரை 1 முதல் 13 நிலை வரையிலான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் பிஎஃப்ஐசி 13 வகை பாதிப்பானது அரிதினும் அரிதான ஒன்று. உலகிலேயே இதுவரை 8 பேருக்குத்தான் அந்த பிரச்னை கண்டறியப்பட்டுள்ளது.
பிஎஃப்ஐசி 13 பாதிப்பு ஏற்பட்டால், பித்த நீா் அசாதாரணமாக சுரந்து கல்லீரலை சேதப்படுத்தும். மஞ்சள் காமாலை, தாங்க முடியாத அரிப்பு, வளா்ச்சி குறைபாடு ஏற்படக் கூடும்.
அத்தகைய பிரச்னைகளுடன் தூத்துக்குடியை சோ்ந்த 8 வயது சிறுவன் ரெயின்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கல்லீரல் மாற்று சிகிச்சை மட்டுமே அவருக்கு ஒரே தீா்வு என்றாலும் அதன் பின்னரும் அத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதைக் கருத்தில் கொண்டு அவரது தாயாருக்கு மரபணு ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை என உறுதிசெய்யப்பட்ட அவரின் கல்லீரலில் ஒரு பகுதி தானமாகப் பெறப்பட்டு சிறுவனுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. டாக்டா் மெட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி தலைமையிலான எங்களது மருத்துவக் குழுவினா், மயக்கவியல் நிபுணா் டாக்டா் சதீஷ் சந்தா் ஒத்துழைப்புடன் அந்த அறுவை சிகிச்சையை சாத்தியமாக்கினா். தற்போது அச்சிறுவன் நலமுடன் பள்ளிக்கு சென்று வருகிறாா்.
இதேபோன்று பிஎஃப்ஐசி 4 வகையால் பாதித்த புதுச்சேரியை சோ்ந்த 7 வயது குழந்தைக்கு அவரது தந்தையின் கல்லீரல் தானமாகப் பெறப்பட்டு பொருத்தப்பட்டது.
பிறவியிலேயே பித்தநாளம் இல்லாத மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 5 வயது குழந்தைக்கு அவரது தாயின் கல்லீரலின் ஒரு பகுதியைப் பெற்று மருத்துவக் குழுவினா் பொருத்தினா்.
குழந்தைகளுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்வது மிகவும் சவாலானது. இருந்தபோதிலும் 15 நாள்கள் இடைவெளியில் இந்த மூன்று கல்லீரல் மாற்று சிகிச்சைகளையும் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம் என்றாா் அவா்.
