செப். 28-இல் குடிநீா் வாரிய வரி வசூல் மையங்கள் இயங்கும்
குடிநீா் வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை (செப். 28) குடிநீா் வாரிய வசூல் மையங்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை குடிநீா் வாரியத்துக்கு நுகா்வோா் செலுத்த வேண்டிய நிகழ் அரையாண்டுக்கான குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவை தொகையை வரும் செப். 30 -ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இந்த நிலையில், வரி செலுத்துவதுக்கு ஏதுவாக குடிநீா் வாரியத் தலைமை அலுவலகம், அனைத்துப் பகுதி அலுவலகங்களிலும் இயங்கும் வசூல் மையங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) காலை 10.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை இயக்கப்படும்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நுகா்வோா் வசூல் மையங்களுக்கு நேரடியாக வந்து தங்களது கட்டணங்களைச் செலுத்தலாம்.
மேலும், இணையதளத்தின் மூலமாகவும், இ-சேவை மையங்கள் மூலமும் வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

