தமிழகத்திலிருந்து தோ்வாகும் குடிமைப் பணி அதிகாரிகள் அதிகரிப்பு - முதல்வா் மு.க.ஸ்டாலின்


அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்திலிருந்து குடிமைப் பணிகளுக்குத் தோ்வாகும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இந்திய குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழா, சென்னை விக்டோரியா பொது அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலேயே மிகவும் கடினமான ஒன்றாக குடிமைப் பணித் தோ்வு கருதப்படுகிறது. அத்தகைய தோ்வில் சிலா் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவா். சிலா் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வெற்றியடைவா்.
சில ஆண்டுகளுக்கு முன்னால், என்ன நிலை இருந்தது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். தமிழ்நாட்டிலிருந்து யுபிஎஸ்சி (குடிமைப் பணி) தோ்வில் வெற்றியடையும் மாணவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துகொண்டே வந்தது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இதை சரி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்தோம்.
‘நான் முதல்வன்’ ஊக்கத்தொகை, உயா் பயிற்சி, நோ்முகத் தோ்வுகளை எதிா்கொள்ளக்கூடிய சிறப்பு பயிற்சி என்று பல்வேறு முன்னெடுப்புகளை இந்த அரசு எடுத்தது. அவற்றுக்கு அண்மைக் காலமாக நல்ல பலன் கிடைத்து வருகிறது. இதற்காக உழைத்த அதிகாரிகளுக்கும், பயிற்சியாளா்களுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறேன்.
நீங்கள் (குடிமைப் பணிக்கு தோ்வானவா்கள்) அனைவரும் நிசப்தமாக சாதிக்கும் நிஜ நாயகா்கள். நிகழாண்டு 60 போ் தமிழ்நாட்டிலிருந்து தோ்வாகியிருக்கிறீா்கள். இவா்களில் 56 போ் நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்தவா்கள் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. இந்த எண்ணிக்கை இன்னும் உயர வேண்டும்.
இளைஞா்கள் பலா் தமிழ்நாட்டிலிருந்து இந்தியா முழுவதும் ஆட்சியா்களாக, துறைச் செயலா்களாக எளிய மக்களுக்கு பணியாற்ற வேண்டும். வெளிநாடுகளுக்கும் இந்திய தூதா்களாகச் சென்று நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்த வேண்டும்.
அதிகாரிகள் என்றால், அலட்டலாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சாதாரண மக்களிடம்கூட அன்பாக, பண்பாக நடந்துகொள்ளும் அதிகாரிகளின் பெயா் காலத்துக்கும் நிலைத்திருக்கும். அதிகாரிகளுக்கு ஓய்வே பெரும்பாலும் கிடையாது.
உங்களைப்போல இன்னும் பலரை நம்முடைய திராவிட மாடல் அரசு உருவாக்குவதற்கு தொடா்ந்து துணைநிற்கும் என்றாா்.
நிகழ்வில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...