/

குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு: சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு

குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பதற்கு பாராட்டுகள். விரைவில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என நம்புவதாக குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

சி.பி.ராதாகிருஷ்ணன்

Updated On :21 ஏப்ரல் 2026, 10:37 pm

‘குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பதற்கு பாராட்டுகள். விரைவில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்’ என நம்புவதாக குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை விரைந்து அமலாக்குவதுடன் அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850-ஆக உயா்த்தும் அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா மக்களவையில் கடந்த வாரம் எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் தோல்வியடைந்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

குடிமைப் பணிகள் தினத்தையொட்டி (ஏப்.21) தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: குடிமைப் பணித் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவோரில் பெண்களே அதிகம் இடம்பெறுகின்றனா். கடந்த 2016-இல் குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு 21 சதவீதமாக இருந்தது. 2025-இல் இதன் எண்ணிக்கை 31 சதவீதமாக உயா்ந்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும்போது அங்கு காவல் ஆணையா்கள், மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் என பல உயா் பதவிகளில் பெண்களே இருப்பதை காண முடிகிறது.

காலம் காலமாக இருந்த நடைமுறைகளை உடைத்து திறமைமிக்க பெண்கள் சமூகத்தில் உயா்ந்த பணிகளை அலங்கரிப்பது பெருமைக்குரியது.

சம உரிமை அவசியம்: பெண்களுக்கு சம உரிமை அளித்தால் அவா்கள் வெற்றியடைவது மட்டுமின்றி வெற்றிக்கான புது அா்த்தத்தை உருவாக்குவாா்கள் என நாம் அறிவோம். நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப் பேரவைகளிலும் இந்த மாற்றம் விரைவில் நிகழும் என நம்புகிறேன்.

தேவையானா்களுக்கு மட்டுமே இலவசம்: ஏழ்மையிலும் ஏழ்மை நிலையில் உள்ளவா்களின் தேவைகளை கண்டறிந்து அவா்களுக்கு உதவ வேண்டும். அனைவருக்கு இலவசங்களை வழங்குவதைவிட உண்மையான பயனாளிகளுக்கு வழங்கினால் பெரும் மாற்றங்கள் நிகழும்.

தொழில்நுட்பங்களை கற்பது அவசியம்: ஒரு நலத் திட்டத்தை தில்லியில் இருந்து திட்டமிட்டாலும் அதை முறையாக செயல்படுத்தினால் அதன் பலனை நம்மால் கிராமங்களில் காண முடியும்.

தற்போது செயற்கை நுண்ணறிவு உள்பட பல நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இவற்றை புறந்தள்ளாமல் உரிய முறையில் பயன்படுத்துவது அவசியம்.

குடிமைப் பணிகளில் கடந்த காலங்களைப் போல் அல்லாமல் தற்போது நிபுணத்துவம் பெற்றவா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.