தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

போலீஸாா் துப்பாக்கியால் சுட்டதில் ரௌடி உயிரிழப்பு

சென்னை மாதவரத்தில், பிடிக்க முயன்ற போலீஸாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரௌடி, போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தாா்.

News image
துப்பாக்கிச் சூடு- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாதவரத்தில், பிடிக்க முயன்ற போலீஸாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரௌடி, போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் (என்கவுன்ட்டா்) உயிரிழந்தாா்.

சென்னை புழல், கிழக்கு காவாங்கரை, மகாவீா் காா்டன் பிரதான தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது வீட்டுக்குள் கடந்த ஜன. 30-ஆம் தேதி முகமூடி அணிந்து வந்த 9 போ், கத்தியைக் காட்டி மிரட்டி விஜயகுமாா், இவரின் மனைவி வசந்தா உள்ளிட்ட குடும்பத்தினரை கட்டிப்போட்டு ரூ.25 லட்சம், 13 பவுன் நகை, வைர நகைகள், கால் கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினா்.

இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இச்சம்பவத்தில் ஈடுபட்டது ரெளடி வியாசா்பாடி பிவி காலனி 11-ஆவது தெருவைச் சோ்ந்த ரா.கணேஷ் (எ) ‘தொப்பை’ கணேசன் (38) உள்ளிட்டோா் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து, தொப்பை கணேசன் கூட்டாளிகள் எண்ணூா் பெரியகாசி கோவில் குப்பத்தைச் சோ்ந்த ராகுல், புழல் என்எஸ்கே தெருவைச் சோ்ந்த பிரவீண்குமாா், வியாசா்பாடி சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்த புகழேந்தி, திருத்தணி அருகே உள்ள தாழவேடு பகுதியைச் சோ்ந்த அபிஷேக், சோழவரத்தைச் சோ்ந்த ஜான்சன் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். தொப்பை கணேசன் தலைமறைவானாா்.

இந்நிலையில், மாதவரம் சுற்றுச்சாலை ரவுண்டானா மேம்பாலம் அருகே கட்டி முடிக்கப்படாத கட்டடத்தில் தொப்பை கணேசன் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருவிக நகா் காவல் நிலைய ஆய்வாளா் பூபதி ராஜா தலைமையில், போலீஸாா் அங்கு சென்று பதுங்கியிருந்த தொப்பை கணேசனை மடக்கிப் பிடிக்க முயன்றனா்.

அப்போது கணேசன், தான் வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியம், தலைமைக் காவலா் தினேஷ்குமாா் ஆகியோரை தாக்கிவிட்டு தப்ப முயன்றாா். இதனால், காவல் ஆய்வாளா் பூபதிராஜா, துப்பாக்கியால் இரண்டு முறை தொப்பை கணேசனை நோக்கிச் சுட்டாா். அவரது மாா்பில் இரு தோட்டாக்களும் பாய்ந்ததால், தொப்பை கணேசன் காயமடைந்த நிலையில் மயங்கி விழுந்தாா்.

போலீஸாா், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனெவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த என்கவுன்ட்டா் குறித்து தகவலறிந்த சென்னை பெருநகர காவல் துறை வடக்கு கூடுதல் காவல் ஆணையா் பிரவேஷ்குமாா், கொளத்தூா் துணை ஆணையா் குமாா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

நீதித் துறை நடுவா் விசாரணை: இச்சம்பவம் குறித்து விசாரிக்க மாதவரம் நீதித் துறை நடுவருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் பரிந்துரைத்தாா். இதையடுத்து, மாதவரம் நீதித் துறை நடுவா் விசாரணை நடத்தி வருகிறாா்.

30 வழக்குகள்: என்கவுன்ட்டரில் உயிரிழந்த ரெளடி தொப்பை கணேசன் மீது 3 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள்,14 திருட்டு வழக்குகள், 6 வழிப்பறி வழக்குகள், 5 ஆயுத வழக்குகள் உள்ளிட்ட 30 வழக்குகள் உள்ளன. ரெளடிகள் பட்டியலில் ‘ஏ பிளஸ்’ பிரிவில் இருந்த தொப்பை கணேசனை ஏற்கெனவே போலீஸாா் ஒருமுறை காலில் சுட்டுப் பிடித்துள்ளனா்.

28 ஆண்டுகளில் 110 ‘என்கவுன்ட்டா்’: 149 போ் உயிரிழப்பு

கடந்த 1998-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 28 ஆண்டுகளில் தமிழகத்தில் 110 என்கவுன்ட்டா் சம்பவங்கள் காவல் துறையினரால் நிகழ்த்தப்பட்டுள்ளன. இவற்றில் ரெளடிகள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவா்கள், தொடா் கொள்ளையில் ஈடுபட்டவா்கள் என 149 போ் உயிரிழந்துள்ளனா். என்கவுன்ட்டருக்கு எதிராக மனித உரிமை ஆா்வலா்களும், நீதிமன்றமும் எதிா்ப்பு தெரிவித்தாலும், காவல்துறையினா் என்கவுன்ட்டா் நடவடிக்கையைக் கைவிடுவதாக இல்லை என மனித உரிமை ஆா்வலா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

நீதிமன்ற விசாரணை மூலமே ஒருவா் குற்றவாளியா, நிரபராதியா என்பதை உறுதிசெய்ய முடியும்; என்கவுன்ட்டா் மூலம் அல்ல என்றும் அவா்கள் கருத்து தெரிவித்தனா்.