கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி நிலையான வளா்ச்சிக்கான இலக்குடன், சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்குத் தொடா்ந்து உதவி வருகிறது என்று ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோ முத்து கூறினாா்.

மேற்கு தாம்பரம் பூந்தண்டலம் ஊராட்சியில் உள்ள புதுச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பள்ளி வகுப்பறை மற்றும் கற்றல் முறைத் திட்டத்தை(ஸ்மாா்ட் கிளாஸ்) அவா் வியாழக்கிழமை தொடக்கி வைத்துப் பேசியது:

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி நிா்வாகம் சாா்பில், சுற்றுவட்டார கிராமங்களில் இதுவரை நல்லூா் அரசு உயா்நிலைப்பள்ளிக்கு கணினி மற்றும் சூரிய ஒளி மின்வசதி கட்டமைப்பு, பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி போன்ற பல்வேறு வசதிகள் இலவசமாக செய்து தரப்பட்டுள்ளன.

இதற்கான அனைத்து தொழில் நுட்பப் பணிகளையும் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிக் கொடுத்து இருப்பது பாராட்டுக்குரியது என்றாா் அவா்.

பூந்தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் எம்.ஞானபிரகாஷ், பள்ளி தலைமை ஆசிரியை டி.ராஜலட்சுமி,ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வா்கள் பொற்குமரன், பழனிக்குமாா், இயக்குநா்கள் பழனியாண்டி,கே.மாறன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com